மத்திய மந்திரி எம்.ஜே அக்பர் மீதான புகாரை விசாரிக்க வேண்டும்: மேனகா காந்தி வலியுறுத்தல்


மத்திய மந்திரி எம்.ஜே அக்பர் மீதான புகாரை விசாரிக்க வேண்டும்: மேனகா காந்தி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Oct 2018 4:00 AM GMT (Updated: 10 Oct 2018 4:00 AM GMT)

மத்திய மந்திரி எம்.ஜே அக்பர் மீதான புகாரை விசாரிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர், முன்பு பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். அந்த காலகட்டத்தில் அவர் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சில பெண் பத்திரிகையாளர்கள் தற்போது குற்றம் சாட்டி உள்ளனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த குற்றச்சாட்டு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இது தீவிரமான புகார். இதுபற்றி சம்பந்தப்பட்ட மந்திரியும், பிரதமரும் பேச வேண்டும். மவுனமாக இருப்பது சரியல்ல” என்றார். 

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்களில் ஒருவரும் மத்திய மந்திரியுமான மேனகா காந்தியும், விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மேனகா காந்தி கூறும் போது, இந்த விவகாரத்தில் கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும். அதிகாரத்தில் உள்ள ஆண்கள் இது போல அடிக்கடி நடந்து கொள்கின்றனர். 

 தற்போது, பெண்கள் வெளிப்படையாக பேச துவங்கியுள்ளனர். எனவே, இவற்றை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்விவகாரம் பற்றி பேசும் போது தங்களின் நடத்தை பற்றி கேள்வி எழுப்பி விடுவார்களோ அல்லது கேலி செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பெண்கள் இருந்தனர். தற்போது பெண்கள் பேசத்துவங்கியுள்ளனர். எனவே ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Next Story