தசராவுக்கு பிறகு, கர்நாடக மக்களுக்கு நல்லது நடக்கும் குமாரசாமி பேச்சு


தசராவுக்கு பிறகு, கர்நாடக மக்களுக்கு நல்லது நடக்கும் குமாரசாமி பேச்சு
x
தினத்தந்தி 10 Oct 2018 8:47 AM GMT (Updated: 10 Oct 2018 8:47 AM GMT)

கர்நாடக மாநிலம் மைசூருவில் இன்று தொடங்கி 19ம் தேதி வரை தசரா விழா நடைபெறுகிறது.

பெங்களூர்,

கர்நாடக மாநிலம் மைசூருவில் கொண்டாடப்படும் தசரா விழா, வரலாற்று சிறப்புமிக்கது. விஜயநகர சமஸ்தானத்தில் கி.பி.1610-ம் ஆண்டு விஜய மன்னர்களால் தசரா விழா கொண்டாடப்பட்டது. காலப்போக்கில் ஸ்ரீரங்கப்பட்டணத்தை ஆண்ட ராஜா உடையார் மன்னரால் மைசூரு மாகாணத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது கர்நாடகத்தின் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டு வந்தது. இதில் பாரம்பரிய நடனம், மல்யுத்தம் உள்பட கர்நாடகத்தின் வீர விளையாட்டுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய புகழ்பெற்ற தசரா விழா ஸ்ரீரங்கப்பட்டணாவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு மைசூரு சாம்ராஜ்ஜியத்தில் யது வம்சத்தின் மன்னர்களால் ஆண்டுதோறும் சீரும், சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அது தற்போது மைசூரு தசரா விழாவாக உலகஅளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த தசரா விழாவின் போது மன்னர்கள் தங்க சிம்மாசனத்தின் மீது அமர்ந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்துவைப்பார்கள். இது தசரா விழாவின் முக்கிய நிகழ்வாகும்.

இந்தியாவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கடந்த 1972-ம் ஆண்டு முதல் கர்நாடக அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவுக்கு மன்னர் குடும்பத்தினரும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்.

உலக பிரசித்தி பெற்ற தசரா விழாவுக்கு வரலாறு உள்ளது. மைசூரு மாகாணத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் போரில் எதிரிகளை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதுபோல் மைசூருவின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசூரனை வீழ்த்தியதை நினைவுக்கூறும் வகையில் தசரா விழா கொண்டாடப்படுவதாகவும் சொல்லப் படுகிறது.

இதனால் மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தசரா விழா 10-ந்தேதி (நளை) தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது 408-வது ஆண்டு தசரா விழாவாகும். இந்த ஆண்டு மழையால் குடகு, தட்சிணகன்னடா ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதால், தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி இன்று (புதன் கிழமை) மைசூரு தசரா விழா தொடங்கியது. அதாவது மைசூரு அருகே சாமுண்டி மலையில் குடிக்கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்வதன் மூலம் தசரா விழாவை இன்போசிஸ் அறக்கட்டளை தலைவியும், எழுத்தாளருமான சுதாமூர்த்தி தொடங்கி வைத்தார். மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் நடைபெற்ற விழாவில், தசரா ஜோதியை அவர் ஏற்றி வைத்தார்.  விழாவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் முன்னிலை வகிக்கித்தார்கள். 

10 நாட்கள் நடைபெற உள்ள தசரா விழாவைக் காண, உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனால், 10 நாட்களும் மைசூரு நகரம் விழாக்கோலம் பூண்டிருக்கும். 

தொடக்க விழாவில்  முதலமைச்சர் குமாரசாமி பேசியதாவது:

தசராவுக்கு பிறகு, கர்நாடக மக்களுக்கு நல்லது நடக்கும். சாமுண்டீஸ்வரி அருளால், கர்நாடக மக்களுக்கு தமது அரசு அனைத்தையும் செய்து வருகிறது.  விவசாயிகள் யாரும் தற்கொலை முடிவுக்கு செல்லக் கூடாது எனவும் தெரிவித்தார்.

Next Story