போட்டியில் வெற்றி பெற்றவருக்கு ரூ.50 லட்சம் வழங்க பெப்சி நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு


போட்டியில் வெற்றி பெற்றவருக்கு ரூ.50 லட்சம் வழங்க பெப்சி நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 10 Oct 2018 10:30 AM GMT (Updated: 10 Oct 2018 10:30 AM GMT)

பெப்சி இந்தியா நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்றவருக்கு ரூ.50 லட்சம் வழங்க டெல்லி நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2010ம் ஆண்டு இந்தியன் பிரிமீயர் லீக் போட்டி நடந்தபொழுது, பெப்சி யங்கிஸ்தான் கா வாவ் என்ற ஆன்லைன் போட்டியை பெப்சி இந்தியா நிறுவனம் நடத்தியது.

இதில் டெல்லியை சேர்ந்த கரீஷ்மா என்ற பெண் வெற்றி பெற்றார்.  ஆனால் அதன்பின் அவருக்கு பரிசு தொகை எதுவும் வழங்கப்படவில்லை.

இதுபற்றி டெல்லி நுகர்வோர் விவகாரங்களுக்கான குறைதீர் ஆணையத்தில் அவர் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.  அதில், பெப்சி நிறுவன 3 பிரதிநிதிகள் எனது வீட்டிற்கு வந்து, 3 நாட்களில் பரிசு தொகை வழங்கப்படும் என கூறி சென்றனர்.

ஆனால் பரிசு தராத நிலையில், பிரதிநிதிகளில் ஒருவரை தொடர்பு கொண்டதில், கல்லூரி மாணவி என்றும் நிறுவனத்தில் பணிபுரியவில்லை என்றும் பதில் அளித்துள்ளார்.

இதனை அடுத்து எனது பெற்றோர் பெப்சி நிறுவனத்திற்கு நேராக செல்ல முயன்றனர்.  ஆனால் அதன் ஊழியர்களில் ஒருவர் உங்களது மகளுக்கு விளைவுகள் கடுமையாக இருக்கும் என மிரட்டினார் என தெரிவித்துள்ளார்.

இதுபற்றி விசாரணை மேற்கொண்ட ஆணையம், வாடிக்கையாளர்களுக்கு பெரிய பரிசுகள் வழங்கப்படும் என கார்ப்பரேட் நிறுவனங்கள் கூறி பொதுமக்களை போட்டிகளில் பங்கேற்க வைக்கும் நோக்கம் வளர்ந்து வருகிறது.  வர்த்தக நோக்கோடு இது மேற்கொள்ளப்படுகிறது.  ஆனால் வெற்றி பெற்றவருக்கு எதுவும் தரப்படுவதில்லை என தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, வெற்றி பெற்றவருக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்க ஆணையம் உத்தரவிட்டதுடன், இழப்பீடாக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுகளுக்காக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story