பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் முறைப்படி புகார் தெரிவியுங்கள்; தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்


பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் முறைப்படி புகார் தெரிவியுங்கள்; தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Oct 2018 11:59 AM GMT (Updated: 10 Oct 2018 11:59 AM GMT)

தேசிய மகளிர் ஆணையம், பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் குற்றவாளிகளின் பெயரை தெரிவிப்பதுடன் நில்லாமல் முறையாக புகாராக பதிவு செய்யும்படி வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

ஹாலிவுட்டில் பிரபலம் அடைந்த மீடூ விவகாரம், கடந்த 2008ம் ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் நானா படேகர் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என தனுஸ்ரீ தத்தா குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில் பாலிவுட்டிலும் பிரபலம் அடைந்துள்ளது.

இதனை அடுத்து இயக்குநர் விகாஸ் பகால், நடிகர் ஆலோக் நாத் உள்ளிட்ட சில திரை பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகள் குவிந்தன.  தொடர்ந்து மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் மீதும் பெண் பத்திரிக்கையாளர்கள் குற்றச்சாட்டுகளை கூறினர்.

இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இதுபோன்ற பல வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளின் பெயரை தெரிவிப்பது என்பதுடன் நின்று விடுகின்றனர்.  அவர்கள் முறைப்படி புகார் எதுவும் தெரிவிப்பதில்லை.

தேசிய மகளிர் ஆணையம் உள்பட துறை சார்ந்த அதிகாரிகளிடம் அவர்கள் எழுத்துப்பூர்வ புகார்களை தெரிவிக்க வேண்டும்.  பணியிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தினை உறுதி செய்ய ஆணையம் முனைப்புடன் உள்ளது.

இதுபோன்ற மீறுதல்கள் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவது என இந்த ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது.  இந்த அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவோர் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.


Next Story