ஆந்திரா–ஒடிசா இடையே காலை கரையை கடக்கும் தித்லி புயல், 5 மாவட்டங்களில் மக்களை வெளியேற்றும் பணி தொடங்கியது


ஆந்திரா–ஒடிசா இடையே காலை கரையை கடக்கும் தித்லி புயல், 5 மாவட்டங்களில் மக்களை வெளியேற்றும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 10 Oct 2018 2:32 PM GMT (Updated: 10 Oct 2018 2:32 PM GMT)

வங்கக்கடலில் உருவான தித்லி புயல் நாளை காலை ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே கரையை கடக்கிறது. ஒடிசா மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.



புவனேஷ்வர்,

 வங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கில் 270 கிலோ மீட்டர் தூரத்திலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென் கிழக்கில் 320 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. அந்த புயல் கலிங்கப்பட்டினத்திற்கும், கோபால்பூருக்கும் இடையே வியாழக்கிழமை காலை கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகள், ஆந்திரா கலிங்கப்பட்டிணம் பகுதியில் கடல் கொந்தளிப்பு இருக்கும் என்றும் பெரிய அலைகள் எழும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது காற்று 145 கிமீ வேகத்தில் அடிக்கும். பின்னர் புயல் வடகிழக்கு திசை நோக்கி திரும்பி மேற்குவங்கம் நோக்கி நகர்ந்து பிறகு படிப்படியாக பலம் இழக்கும் என்று விசாகப்பட்டிணம் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் நிலையில் ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. மேற்கு வங்காளம், வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் மீன்வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மேற்கு வங்காளம் மாநிலத்திலும் 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

ஒடிசாவில் முன்னெச்சரிகை நடவடிக்கை

5 மாவட்டங்களில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும் நிலையில் காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால் அங்கு அம்மாநில அரசு தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மாநில முதல்வர் நவீன் பாட்நாயக் அம்மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையை மேற்கொண்டார். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

ஒடிசாவின் 4 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மக்கள் புயல் அச்சம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை வாங்கி குவித்து வருகிறார்கள். இப்படி பதற்றமாக வாங்கி குவிக்க வேண்டிய அவசியமில்லை என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரையில் 14 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு படை போலீசாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story