உ.பி. எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து நேரிட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு


உ.பி. எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து நேரிட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு
x
தினத்தந்தி 10 Oct 2018 3:59 PM GMT (Updated: 10 Oct 2018 3:59 PM GMT)

உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து நேரிட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.


லக்னோ,

 
மேற்கு வங்காளத்தின் மால்டாவில் இருந்து டெல்லி சென்ற ‘நியூ பரக்கா எக்ஸ்பிரஸ்’ ரெயில் உத்தரபிரதேச மாநிலம் ஹர்சந்த்பூர் பகுதியில் காலை 6.10 மணியளவில் தடம்புரண்டு விபத்து நேரிட்டது. திடீரென ரெயிலின் என்ஜின் மற்றும் 9 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளாயின. இதில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி பலத்த சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது. 

சுமார் 30 பயணிகள் காயமடைந்தனர். இதில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இப்போது உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்துமாறு உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் உத்தரவிட்டு உள்ளார். இந்த விபத்தின் பின்னணியில் பயங்கரவாத சதி உள்ளதா? என்றும் விசாரிக்கப்படும் என அவர் கூறினார்.

ரெயில் தடம்புரண்ட விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டார். இதைப்போல ரெயில்வே மந்திரியும் தனது டுவிட்டர் தளத்தில் இரங்கல் வெளியிட்டு இருந்தார். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனக்கூறிய அவர், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவியும் அறிவித்தார். 

இதைப்போல உத்தரபிரதேச அரசும் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story