‘ரபேல்’ போர் விமான விவகாரம்: சாதகமாக செயல்பட்ட பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு - காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு


‘ரபேல்’ போர் விமான விவகாரம்: சாதகமாக செயல்பட்ட பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு - காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Oct 2018 9:15 PM GMT (Updated: 10 Oct 2018 8:00 PM GMT)

ரபேல் போர் விமான விவகாரத்தில், சாதகமாக செயல்பட்ட பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு கூறியுள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை அனில் அம்பானி நிறுவனத்துக்கு அளிப்பதற்காக, அனைத்து நடைமுறைகளையும் மோடி அரசு வளைத்தது. ரபேல் விமானத்துக்கு அதிக விலை கொடுப்பதற்கு ராணுவ அமைச்சக இணை செயலாளராக இருந்த ராஜீவ் வர்மா ஆட்சேபனை தெரிவித்தார்.

அப்போது, ராணுவ அமைச்சகத்தில், கொள்முதலுக்கான தலைமை இயக்குனராக இருந்த ஆஷா ராம் சிஹாக் நேர்மையானவர். அவர் உடன்பட மாட்டார் என்பதால், அவரை மாற்றி விட்டு, ஸ்மிதா நாகராஜ் என்ற பெண் அதிகாரியை அப்பதவியில் நியமித்தனர். அவர் ராஜீவ் வர்மாவின் ஆட்சேபனையை நிராகரித்தார். அதற்கு பிரதி உபகாரமாக, ஸ்மிதா நாகராஜுக்கு பதவி உயர்வு அளித்து, மத்திய பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக மோடி அரசு நியமித்தது. இதில், 65 வயதுவரை பணியில் இருக்கலாம்.

இதன்மூலம், பணியாத அதிகாரிகளுக்கு தண்டனையும், உடந்தையாக இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.


Next Story