ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் - மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்


ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் - மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்
x
தினத்தந்தி 10 Oct 2018 10:30 PM GMT (Updated: 10 Oct 2018 8:43 PM GMT)

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

புதுடெல்லி,

ரெயில்வே ஊழியர்களுக்கு தசரா மற்றும் பூஜை கால விடுமுறை நாட்களுக்கு முன்பாக போனஸ் வழங்கப்படுவது வழக்கம். ரெயில்வே இலாகாவின் செயல் திறனை மேம்படுத்தும் விதமாக கடந்த சில ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர்களுக்கு அவர்களுடைய உற்பத்தி திறன் சார்ந்து 78 நாள் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2017-18-ம் ஆண்டுக்கான போனஸ் வழங்குவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், “ரெயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி திறன் சார்ந்த 78 நாட்கள் போனஸ் வழங்குவதற்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 11 லட்சத்து 91 ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் பயன் அடைவார்கள். மொத்தம் ரூ.2,044 கோடி போனசாக வழங்கப்படும். இதில் போனஸ் பெற தகுதியுள்ள ஒரு ஊழியருக்கு அதிகபட்சமாக ரூ.17,951 கிடைக்கும்” என்றார்.

இதேபோல் திருப்பதி மற்றும் பெர்ஹாம்பூர்(ஒடிசா) நகரங்களில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.) ரூ.3,074 கோடி செலவில் புதிய நிரந்தர வளாகங்கள் கட்டுவதற்கு மத்திய மந்திரி சபை தனது ஒப்புதலை வழங்கியது. இந்த 2 நிறுவனங்களுக்கும் 2021-ம் ஆண்டுக்குள் வளாகங்கள் கட்டி முடிக்கப்படும்.

நேற்றைய மந்திரி சபை கூட்டத்தில் இந்தியாவும், லெபனானும் வேளாண்துறை மற்றும் அவை சார்ந்த துறைகளில் இணைந்து செயல்படுவதற்காக செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பின்லாந்து நாட்டுடன் சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

தேசிய தொழிற் பயிற்சி கவுன்சில் மற்றும் தேசிய திறன் மேம்பாட்ட முகமை ஆகியவற்றை தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் இணைப்பதற்கும் மத்திய மந்திரி சபை தனது ஒப்புதலை வழங்கியது.


Next Story