வேட்பாளர்கள் கிரிமினல் குற்றங்களை டி.வி., பத்திரிக்கையில் விளம்பரம் செய்ய வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவு


வேட்பாளர்கள் கிரிமினல் குற்றங்களை டி.வி., பத்திரிக்கையில் விளம்பரம் செய்ய வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 11 Oct 2018 10:15 AM GMT (Updated: 11 Oct 2018 10:15 AM GMT)

வேட்பாளர்கள் கிரிமினல் குற்றங்களை தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


புதுடெல்லி,


கிரிமினல் குற்றங்களை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட்டால், குற்ற சம்பவங்களை வேட்பு மனுவில் தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சிகளும் தங்களுடைய இணையதளங்களில் வெளியிட வேண்டும், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

வேட்பாளர்கள் கிரிமினல் குற்றங்களை தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் குறைந்தபட்சம் 3 முறை விளம்பரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் தங்கள் மீதான கிரிமினல் குற்றங்களை விளக்கும் வகையில் தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் குறைந்தபட்சம் 3 முறையாவது வெவ்வேறு தேதிகளில்  விளம்பரம் செய்ய வேண்டும். இதுகுறித்தான தகவல்களை திருத்தப்பட்ட வேட்பாளர் படிவம் 26-ல் குறிப்பிட வேண்டும். கிரிமினல் குற்றம் கொண்ட வேட்பாளர்களை களமிறக்கும் அரசியல் கட்சிகள் தங்களுடைய இணையதளங்களில் தகவல்களை வெளியிட வேண்டும். 

வேட்பாளர்கள் குற்றப் பின்னணி குறித்த தகவல்களையும், எவ்வளவு கிரிமினல் வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பதை தெரிவிக்க வேண்டும்.  

இந்த உத்தரவை செயல்படுத்தாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அல்லது முடக்கப்படும்.  தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் ஒப்படைக்க வேண்டும். வேட்பாளர்கள் விளம்பரம் செய்துள்ளார்கள் என்பது தொடர்பாக அரசியல் கட்சிகளும் ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும். வரும் 5 மாநில சட்டசபைத் தேர்தலின் போதே இது நடைமுறைக்கு வருகிறது. இந்த விளம்பர செலவுகள் வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story