பாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் - மத்திய அமைச்சர்


பாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் - மத்திய அமைச்சர்
x

பாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறியுள்ளார்.


ராஞ்சி, 


பிரபல பத்திரிக்கையாளர்களாக இருந்து, பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைதியாக இருப்பது ஏன்? அவர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 

இதற்கிடையே மத்திய அமைச்சர்களாக இருக்கும் சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன் ஆகியோர் மத்திய அமைச்சருக்கு எதிரான விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மறுத்துவிட்டனர். மேனகா காந்தி மட்டும் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பத்திரிக்கையாளர்கள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர்தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று ஸ்மிரிதி இரானி கூறினார். இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என்று மற்றொரு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறியுள்ளார். 

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அதவாலே செய்தியாளர்களிடம் பேசுகையில்,  எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவர் பதிலளிக்கையில், மந்திரி எம்.ஜே.அக்பர் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவரது விளக்கத்தையும் நாம் கேட்க வேண்டும். பின்னர் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும். அதில் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் பதவி விலக வேண்டும் என்றார். 
 
நடிகரோ அல்லது அரசியல்வாதியோ யாராக இருந்தாலும் பெண்களுக்கு கேடு விளைவிக்க உரிமை இல்லை என்று கூறிய அதவாலே, அதேநேரம் இதுபோன்ற புகார்கள் மூலம் அரசியல்வாதி அல்லது நடிகர்களின் புகழை வேண்டுமென்றே கெடுக்க நினைப்போரையும் போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

Next Story