லஞ்சம் வாங்குவதில் தமிழகத்துக்கு 3-வது இடம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்


லஞ்சம் வாங்குவதில் தமிழகத்துக்கு 3-வது இடம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 12 Oct 2018 9:24 PM GMT (Updated: 12 Oct 2018 9:24 PM GMT)

பத்திரப்பதிவுத்துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுவதால், தமிழகம் லஞ்சம் வாங்குவதில் 3-வது இடத்தில் உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகம் லஞ்சம் வாங்கப்படுக்கிறது என்பது குறித்து தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஆய்வு நடத்தியது. குறிப்பட்ட சில வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து 15 மாநிலங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

இதில், அதிகம் லஞ்சம் வாங்கும் மாநிலமாக பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரபிரதேச மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அங்கு பத்திரப்பதிவுத்துறை, வரித்துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை போன்றவற்றில் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடப்பதாக 59 சதவீத மக்கள் கூறுகின்றனர்.

காங்கிரஸ் ஆளும் மாநிலமான பஞ்சாப் 2-வது இடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 56 சதவீத மக்கள் லஞ்சம் கொடுத்த பிறகே தங்களின் பணிகள் முடித்துத் தரப்படுவதாக கூறி இருக்கிறார்கள். அங்கு போலீசாருக்கே அதிக அளவில் லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதனை தொடர்ந்து, அதிகம் லஞ்சம் வாங்குவதில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் பத்திரப்பதிவு துறையில் தான் அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இங்கு 52 சதவீதம் மக்கள் தங்களுடைய பணிகளை முடிக்க லஞ்சம் கொடுப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

மொத்தத்தில் இந்த ஆய்வின் மூலம் நாடு முழுவதும் பத்திரப்பதிவுத்துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுவது தெரிய வந்திருக்கிறது.


Next Story