ஐகோர்ட்டு நீதிபதி ஆதரவு - நீதித்துறையிலும் பாலியல் தொல்லை இருப்பதாக ஒப்புதல்


ஐகோர்ட்டு நீதிபதி ஆதரவு - நீதித்துறையிலும் பாலியல் தொல்லை இருப்பதாக ஒப்புதல்
x
தினத்தந்தி 12 Oct 2018 9:40 PM GMT (Updated: 12 Oct 2018 9:40 PM GMT)

நீதித்துறையிலும் பாலியல் தொல்லை இருப்பதாக ஐகோர்ட்டு நீதிபதி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

மும்பை,

தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் புகார் தெரிவிக்கும் ‘மீ டூ’ இயக்கம் கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த இயக்கத்துக்கும், துணிச்சலாக புகார்களை தெரிவிக்கும் பெண்களுக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. அந்தவகையில் மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கவுதம் படேல் ‘மீ டூ’ இயக்கத்தை ஆதரித்து உள்ளார்.

இந்திய வணிகர் சங்கத்தின் பெண்கள் பிரிவு சார்பில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இது தொடர்பாக கூறியதாவது:-

பெண்கள் எவ்வளவு தகுதி வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் பெண்கள் என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து இதுபோன்ற பாலியல் கொடுமைகள் அவர்களுக்கு இழைக்கப்படுகின்றன. நமது உலகம் ஆணாதிக்கம் நிறைந்தது மட்டுமின்றி, ஒருதலைபட்சமானதும்கூட. பெண்கள் சுதந்திரமாக பேசுவதற்கு அது அனுமதிக்காது.

எனவேதான் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை துணிச்சலாக வெளியிட மறுக்கின்றனர். பரவலாக நடைபெறும் இதுபோன்ற பாலியல் கொடுமைகளும், ஆணாதிக்கமும் நீதித்துறையிலும் இருக்கின்றன.

இத்தகைய கொடுமையை வெளியே சொல்வதற்கு நிறைய துணிச்சல் வேண்டும். அப்படி இந்த புகார்களை துணிந்து கூறிவரும் பெண்களை முழு மனதுடன் ஆதரிக்கிறேன். சீரழிந்து கிடக்கும் இந்த நடைமுறையை மாற்றுவது குறித்து விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கவுதம் படேல் கூறினார்.


Next Story