தேசிய செய்திகள்

‘மீ டூ’ பாலியல் புகார்கள்: மத்திய அரசு நடவடிக்கை + "||" + 'Me Too' Sexual Complaints: Central Government action

‘மீ டூ’ பாலியல் புகார்கள்: மத்திய அரசு நடவடிக்கை

‘மீ டூ’ பாலியல் புகார்கள்: மத்திய அரசு நடவடிக்கை
‘மீ டூ’ பாலியல் புகார்கள் எதிரொலியாக, ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்ட 4 உறுப்பினர் விசாரணை குழுவை மத்திய அரசு அமைக்கிறது.
புதுடெல்லி,

மீ டூ இயக்க பாலியல் புகார்களில், மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்ட 4 உறுப்பினர் விசாரணை குழுவை அமைக்கிறது.

அரசியல்வாதிகள், நடிகர்கள், பாடலாசிரியர்கள் என பிரபலமான ஆண்கள் மீது பெண்கள் பாலியல் புகார் கூறுவது பெருகி வருகிறது.


நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறியதைத் தொடர்ந்து, ‘மீ டூ’ என்ற ‘ஹேஷ்டாக்’ இயக்கம் உருவானது. இதில் இணைந்து பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் பாலியல் புகார் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் மீ டூ இயக்கம், நாடறிந்த இயக்கமாக மாறி வருகிறது. ஆனால் இப்படி புகாருக்கு ஆளாகிறவர்கள் மீது விசாரணையோ, நடவடிக்கையோ பாயவில்லை. இந்த நிலை மாறப்போகிறது.

‘மீ டூ’ இயக்க புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில், ஒரு விசாரணைக்குழுவை மத்திய அரசு அமைக்கப்போகிறது. இதுபற்றி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி, டெல்லியில் கூறியதாவது:-

பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை வெளிப்படுத்தியுள்ள அனைத்துப் பெண்களையும் நான் நம்புகிறேன். ஒவ்வொரு பெண்ணின் வலி, காயத்தின் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.

இந்தப் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற மூத்த நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள் கொண்ட 4 உறுப்பினர் குழுவை எங்கள் அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்போகிறோம். மீ டூ இயக்க புகார் களை இந்தக் குழு கவனிக்கும்.

பாலியல் தொல்லைகள் தொடர்பான புகார்களை கையாள்வதற்கு சட்டம் மற்றும் நிறுவன ரீதியிலான கட்டமைப்பை ஏற்படுத்துவது பற்றி இந்தக் குழு ஆராயும்.

இத்தகைய புகார்களை வெளியே சொல்வதற்கு பெண்கள் நீண்ட காலம் எடுத்துக்கொண்டுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக அறைகளுக்குள் அடைபட்டுக்கிடந்த யானைகள் போல இந்தப் புகார்கள், அவர்களுக்குள் இருந்திருக்கின்றன. இப்போது எழுந்துள்ள கேள்வி, இத்தனை ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்தப் புகார்களை அவர்கள் எப்படி நிரூபிக்கப்போகிறார்கள் என்பதாகும்.

அவர்கள் வார்த்தைகளால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்கள் தொடப்பட்டும், கிள்ளப்பட்டும், உடைகள் இழுக்கப்பட்டும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த அசுரன்கள் யார் என அடையாளம் காட்டி, அசிங்கப்படுத்துவதுதான் முதல் வேலை. இந்தப் பெண்கள் தாங்கி வந்த வலிகள் குறைவதற்கு, இதைச் செய்து முடிப்பதற்கே நீண்ட காலம் ஆகும்.

அடுத்தகட்டமாக, அவர்களின் பிரச்சினையை கேட்பதற்கு குழு அமைக்கப்படும். பெண்கள் எளிதாக அணுகி, என்னிடம் புகார் கூறுவதற்கான எளிதான சூழலை எனது அமைச்சகம் உருவாக்கி உள்ளது. பெயர் இல்லாமல் வருகிற புகார்கள் கூட கவனத்தில் கொள்ளப்படும்.

சீ பாக்ஸ் மூலமும் பெண்கள் புகார் செய்ய முடியும். (www.shebox.nic.in), பாலியல் தொல்லை தொடர்பாக, தான் எந்த வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும் பெண்கள் தயக்கமின்றி புகார் செய்யலாம். பாலியல் புகார்களை minwcd@nic.in என்ற முகவரியிலும் செய்ய முடியும்.

பெண்கள் பாதுகாப்பில் தற்போதைய மத்திய அரசு மிகுந்த கவனம் கொண்டுள்ளது. பெண்களின் உரிமைகளுக்கு பிரதமர் அதிகபட்ச முன்னுரிமை அளித்து வருகிறார். அவர் தொடங்கி வைத்த முதல் திட்டமே பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டம்தான். பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.