28, 29-ந்தேதிகளில் உச்சி மாநாடு பிரதமர் மோடி ஜப்பானில் 2 நாள் சுற்றுப்பயணம்


28, 29-ந்தேதிகளில் உச்சி மாநாடு பிரதமர் மோடி ஜப்பானில் 2 நாள் சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 12 Oct 2018 10:30 PM GMT (Updated: 12 Oct 2018 10:03 PM GMT)

வருகிற 28, 29-ந்தேதி நடைபெறும் இரு நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜப்பானில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி,

இந்தியா-ஜப்பான் இடையே 13-வது வருடாந்திர உச்சி மாநாடு வருகிற 28, 29-ந்தேதிகளில் ஜப்பானில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

அப்போது அவர் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை சந்தித்து பேசுகிறார். இரு நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்துக் கொள்ள இருப்பது இது 5-வது முறையாகும். மொத்தத்தில் மோடி பிரதமர் பதவி ஏற்ற பிறகு ஷின்ஜோ அபேயை சந்திப்பது 12-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின்போது மோடிக்கு, ஜப்பான் பிரதமர் சிறப்பு விருந்து அளித்தும் கவுரவிக்கிறார்.

இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளில் இன்னும் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்படுவது, உலக அளவில் இணைந்து பணியாற்றுவது ஆகியவற்றுக்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது பற்றியும் இரு நாடுகளின் தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதியிலும், அதற்கு அப்பாற்பட்டும் அமைதி மற்றும் சுபிட்சத்தை மேம்படுத்துவதற்கான தொலை நோக்கு பார்வையாகவும் மோடி-ஷின்ஜோ அபே சந்திப்பு அமையும்.

மேலும் இந்தியாவும், ஜப்பானும் பல்வேறு துறைகளில் பரஸ்பரம் இணைந்து செயலாற்றுவது குறித்தும் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.

இதுபற்றி மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பிரதமரின் ஜப்பான் பயணம் இரு நாடுகளுக்கும் இடையே பாரம்பரியமாக உள்ள பிணைப்பை மீண்டும் உறுதி செய்வதாக அமையும்” என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story