மீடூ பாலியல் புகார்கள் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி


மீடூ பாலியல் புகார்கள் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 14 Oct 2018 9:51 AM GMT (Updated: 14 Oct 2018 9:51 AM GMT)

மீடூ பாலியல் புகார்கள் குறித்து பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? என காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது.



புதுடெல்லி,


மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றியவர். பெண்கள் தங்களுக்கு நேரிட்ட பாலியல் துன்புறுத்தல்களை மீடூ பிரசாரம் மூலம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இதில் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவருக்கு எதிராக பெண்கள் அடுக்கடுக்காக புகார்களை தெரிவித்து வருகிறார்கள். பத்திரிக்கையில் அவருடன் பணியாற்றிய போது எவ்வாறெல்லாம் மோசமாக நடந்துக்கொண்டார் என்பதை பெண் பத்திரிக்கையாளர்கள் விரிவாக தெரிவித்து வருகிறார்கள். 

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் யாரும் வெளிப்படையாக பதில் தெரிவிக்கவில்லை. அவர்தான் பதிலளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பியுள்ள எம்.ஜே. அக்பர், தன்மீதான பாலியல் புகார்கள் குறித்ததற்கு உரிய விளக்கத்தை வெளியிடுவேன் என குறிப்பிட்டுள்ளார். இந்தியா முழுவதும் பெரும் புயலாக மீடூ மாறியுள்ள நிலையில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பதை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், “எல்லா விஷயம் தொடர்பாகவும் பேசும் பிரதமர், இப்போது மீடூ தொடர்பாக அமைதியாக இருக்கிறார். அவருடைய அமைதியானது, பிரதமர் அலுவலகத்தின் மாண்பு மீது கேள்வியை எழுப்புகிறது. அவருடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று தேசம் காத்திருக்கிறது,” என்று கூறியுள்ளார். 


Next Story