தேவஸ்தான போர்டுடன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி : சபரிமலைக்கு செல்லவிடாமல் இளம் பெண்கள் தடுத்து நிறுத்தம்


தேவஸ்தான போர்டுடன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி : சபரிமலைக்கு செல்லவிடாமல் இளம் பெண்கள் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Oct 2018 11:30 PM GMT (Updated: 16 Oct 2018 8:44 PM GMT)

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டுடன் கோவில் தலைமை தந்திரியும், பந்தளம் அரச குடும்பத்தினரும் நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து கடந்த மாதம் 28–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக கேரளாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி கேரள அரசு மனுதாக்கல் செய்யவேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று(புதன்கிழமை) மாலை திறக்கப்படுகிறது. 22–ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்து இருக்கும்.

இதனால் பெண்களின் வருகை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு அவசர ஆலோசனை கூட்டத்தை திருவனந்தபுரத்தில் நேற்று நடத்தியது. இதில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி வரும் அய்யப்பன்கோவில் தலைமை தந்திரி, பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்தக் கூட்டத்தில் எந்த சமரச தீர்வு காணப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதுபற்றி பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த சசிகுமார் வர்மா நிருபர்களிடம் கூறுகையில் ‘‘தேவஸ்தான போர்டு சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது பற்றி அக்டோபர் 19–ந் தேதி விவாதிக்கலாம் என்றனர். ஆனால் இன்றைய கூட்டத்தில் இதுபற்றி பேச அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதை அறிந்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். எனவே ஆலோசனை கூட்டம் திருப்திகரமாக அமையவில்லை. எங்களுடைய கோரிக்கை ஏற்க தேவஸ்தான போர்டு தயாராக இல்லாததால் கூட்டத்தில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம்’’ என்றார்.

இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே, சபரிமலைக்கு செல்லும் நுழைவு வழியான நிலக்கல் அடிவாரத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இங்கிருந்துதான் அய்யப்ப பக்தர்கள் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பம்பைக்கு தங்களது மலைப்பயணத்தை மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கல் பகுதிக்கு நேற்று ஏராளமான இளம் பெண்கள் பல்வேறு வாகனங்களில் வந்தனர். அவர்களை கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்திருந்த வயது மூத்த பெண்கள் தடுத்து நிறுத்தி திரும்பிச் செல்லும்படி அறிவுறுத்தினர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும் சபரிமலைக்கு செல்லாமல் பெண்களை தடுத்து நிறுத்தியவர்களை போலீசார் எதுவும் செய்யவில்லை.

பெங்களூருவில் இருந்து பஸ்சில் வந்த கல்லூரி மாணவர்கள் கருப்பு நிற பனியன் அணிந்து இருந்ததால் போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். இதேபோல் கேரள அரசு மற்றும் தனியார் பஸ்களை அய்யப்ப பக்தர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். அவற்றில் இருந்த இளம் பெண்களை மூத்த வயது பெண்கள் இறக்கிவிட்டனர்.

இதேபோல் ஊடகங்கள் சார்பில் செய்தி சேகரிப்பதற்காக சபரிமலை நோக்கி பயணம் செய்த பெண் செய்தியாளர்களும் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதற்கிடையே நிருபர்களுக்கு பேட்டியளித்த கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:–

சபரிமலை கோவிலில் சட்டத்தை யாரும் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம். கோவிலுக்கு வரும் பெண்கள் யாரும் தடுத்து நிறுத்தப்படமாட்டார்கள். அதேநேரம் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை அரசு செய்து கொடுக்கும்.

சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்யாது. அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான உத்தரவை அமல்படுத்துவோம் என்று நாங்கள் கோர்ட்டில் தெரிவித்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலைக்கு செல்ல முயன்ற இளம் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனரே? என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘பெண்களின் உரிமைக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தல் மீதும் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதையும் உறுதி செய்வோம்’’ என்றார்.

இந்த நிலையில் சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தனம் திட்டா நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஆன்டன் ஆன்டனி, நேற்று எருமேலியில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மகளிர் காங்கிரஸ், இந்திய யூனியன் லீக் மற்றும் கேரள காங்கிரஸ்(எம்) ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசுகையில், ‘‘மாநிலத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். எனவே மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக உடனே அவசர சட்டம் பிறப்பிக்கவேண்டும். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதினேன். ஆனால் பிரதமரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை’’ என்றார்.


Next Story