ரெயில் டிரைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது, ரெயில்வேயின் தவறு கிடையாது - ரெயில்வே இணை அமைச்சர்


ரெயில் டிரைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது, ரெயில்வேயின் தவறு கிடையாது - ரெயில்வே இணை அமைச்சர்
x
தினத்தந்தி 20 Oct 2018 11:27 AM GMT (Updated: 20 Oct 2018 11:27 AM GMT)

ரெயில் டிரைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது, ரெயில்வேயின் தவறு எதுவும் கிடையாது என ரெயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்கா கூறியுள்ளார்.


புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், ரெயில் தண்டவாளம் அருகே தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதியதில் 60 பேர் பலியானார்கள். 

ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பட்டாசுகள் வெடித்த போது, தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் ஏறிச்சென்றது. ரெயில்வே தண்டவாளம் பகுதி அனுமதியளிக்கப்படாத பகுதியாகும். நிர்வாகத்திடம் அனுமதி  கேட்கப்படவில்லை என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட ரெயில் ஓட்டுநர் ‘எனக்கு கிரீன் சிக்னல்தான் கொடுக்கப்பட்டது,’ என தெரிவித்தார்.

ரெயிலுக்கு கிரீன் சிக்னல்தான் கொடுக்கப்பட்டது, நூற்றுக்கணக்கான மக்கள் ரெயில்வே தண்டவாளத்தில் நிற்கிறார்கள் என்பது தொடர்பாக எனக்கு எந்தஒரு ஐடியாவும் கிடையாது என தெரிவித்தார். அவரிடம் பஞ்சாப் போலீசும், ரெயில்வே போலீசும் விசாரித்தது. விபத்து நேரிட்ட போது புகைமூட்டம் இருந்ததாகவும், பட்டாசு சத்தம் மற்றும் மக்கள் கோஷமும் இருந்துள்ளது என கூறப்படுகிறது. இதற்கிடையே அனுமதியின்றி ரெயில்வே பகுதியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.

இன்று விபத்து நேரிட்ட பகுதியில் போராட்டம் நடத்திய மக்கள் ரெயில் டிரைவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இந்நிலையில் ரெயில் டிரைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது, ரெயில்வேயின் தவறு எதுவும் கிடையாது என ரெயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்கா கூறியுள்ளார். “இது ரெயில்வேயின் தவறு கிடையாது. ரெயில்வே தரப்பில் எந்தஒரு குறைபாடும் கிடையாது, டிரைவருக்கு எதிராக எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை ரெயில்வே தண்டவாளம் பகுதியில் நடத்துவதை மக்கள் நிறுத்த வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தால், விபத்தை தவிர்த்து இருக்கலாம்,” என கூறியுள்ளார் மனோஜ் சின்கா. 

ரெயில்வே தண்டவாளம் பகுதியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது தொடர்பாக எந்தஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை என ரெயில்வே தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story