நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார்


நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார்
x
தினத்தந்தி 21 Oct 2018 10:45 PM GMT (Updated: 21 Oct 2018 7:10 PM GMT)

நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது. தனது தோழிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக துணை நடிகை ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார்.

பெங்களூரு, 

நடிகர் அர்ஜூன் ‘நிபுணன்’ என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். அந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார் என்று சுருதி ஹரிகரன் ‘மீ டூ’ இயக்கத்தின் மூலம் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். பாலியல் புகார் கூறியுள்ள நடிகை சுருதி ஹரிகரனுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை நீதுஷெட்டி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு படப்பிடிப்பில் அர்ஜூன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக துணை நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத அந்த துணை நடிகை ஒரு தனியார் கன்னட செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ‘அர்ஜூனடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு மைசூருவில் நடந்தது. அந்த படத்தின் படப்பிடிப்பில் நான் 3 நாட்கள் கலந்து கொண்டு நடித்தேன். என்னுடன் 20 கல்லூரி மாணவிகள் பகுதிநேர அடிப்படையில் நடித்தனர். அந்த காட்சியில் மாணவிகள் குழுவாக சேர்ந்து நடித்தனர். அப்போது நடிகர் அர்ஜூன், என்னிடம் வந்து அந்த பெண்களின் தொலைபேசி எண்ணை கேட்டார்.

மேலும் அவர் ஒரு ரெசார்ட்டில் உள்ள அறை எண்ணை கொடுத்து, அங்கு வருமாறு என்னிடமும், எனது தோழிகளிடமும் கூறினார். எனது தோழிகள், பட வாய்ப்புக்காக அர்ஜூனின் அறைக்கு சென்றனர். அங்கு தோழிகளிடம் அர்ஜூன் தவறாக நடந்து கொண்டார்.

நடிகர் பிரகாஷ்ராஜூம் இந்த படத்தில் நடித்தார். அர்ஜூனுக்கும், எங்களுக்கும் தொடர்பு கிடையாது. ஆயினும் அவர் எங்கள் குழுவின் தலைவரை தொடர்பு கொண்டு, அவருக்கு பணம் கொடுத்து பெண்களை அறைக்கு அழைத்துச் சென்றார்.

நடிகர்கள் சுதீப், உபேந்திரா ஆகியோரின் படங்களிலும் நாங்கள் நடித்துள்ளோம். ஆனால் அர்ஜூனுடன் மட்டும் எங்களுக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாங்கள் படப்பிடிப்புக்கு செல்வதை நிறுத்திவிட்டோம்.

இவ்வாறு அந்த துணை நடிகை கூறினார்.

அந்த துணை நடிகை கண்களை தவிர்த்து தனது முகத்தை முழுவதுமாக உடையால் மூடியபடி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். தனது பெயர் உள்பட எந்த விவரத்தையும் கூற அந்த துணை நடிகை மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் கூறியுள்ள நடிகை சுருதி ஹரிகரன் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

படப்பிடிப்பின்போது, எனக்கு நடிகர் அர்ஜூன் பாலியல் தொல்லை கொடுத்தார். படப்பிடிப்பு முடிவடைந்ததும், ரெசார்ட்டுக்கு வரும்படியும், இரவு உணவு சாப்பிட வரும்படியும் அவர் அழைத்தார். ஆனால் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். இது பாலியல் தொல்லை தான் என்று என்னால் ஒரு பெண்ணாக உணர்ந்துகொள்ள முடிந்தது.

இந்த பாலியல் தொல்லையை என்னால் அப்போது பகிரங்கப்படுத்த முடியவில்லை. அந்த அளவுக்கு எனக்கு தைரியமும் இல்லை. ‘பயர்’ என்ற அமைப்பு எனக்கு ஆதரவு வழங்கியுள்ளது. அதனால் இப்போது அந்த தைரியம் வந்துள்ளது. அதனால் இந்த விஷயத்தை பகிரங்கப் படுத்தி உள்ளேன்.

நான் பெரிய நட்சத்திர நடிகர்களுடன் நடித்துள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் இந்த மோசமான அனுபவம் நடந்தது இல்லை. நான் வெறும் விளம்பரத்திற்காக இந்த விஷயங்களை வெளிப்படுத்தவில்லை. பாலியல் தொல்லைக்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. நடிகர் அர்ஜூன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன்.

அதனால் ஆதாரங்களை இப்போது வெளிப்படுத்த மாட்டேன். நேரம் வரும்போது அவற்றை பகிரங்கப்படுத்துவேன். அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டால், நீதி கிடைத்தது போன்ற நிலை ஏற்படும். ஆனால் அதை விட அவருக்கு பெரிய பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு சுருதி ஹரிகரன் கூறினார்.

நீதுஷெட்டி ஆதரவு

நடிகர் அர்ஜூன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ள சுருதி ஹரிகரனுக்கு பிரபல நடிகை நீதுஷெட்டி ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து நீதுஷெட்டி கூறியதாவது:-

நான் சுருதி ஹரிகரனுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இத்தகைய பாலியல் தொல்லைகளை யாரும் வெறும் விளம்பரத்திற்காக கூற மாட்டார்கள். கையில் படம் இல்லை. அதனால் விளம்பரம் கிடைக்கும் என்ற உள்நோக்கம் எந்த நடிகைக்கும் இருக்காது. சுருதிக்கு ஆதரவு வழங்கியவுடன், நடிகர் அர்ஜூனை புறக்கணித்துவிட்டோம் என்று அர்த்தம் இல்லை.

நான் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இந்த விவகாரத்தில் பலரது கருத்தும், ஒரே சார்பாக உள்ளது. சுருதிக்கு ஏற்பட்ட வலியை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். உடனே அவரை நான் நல்லவர் என்றோ, நடிகர் அர்ஜூனை கெட்டவர் என்றோ சொல்ல மாட்டேன். நான் சினிமா துறைக்கு வந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு இத்தகைய மோசமான அனுபவங்கள் அதிகமாக நடந்தது இல்லை.

ஆனால் ஒரு சில இடங்களில் கசப்பான அனுபவமும் எனக்கு நடந்துள்ளது. ஆனால் அதற்கு என்னால் ஆதாரத்தை வழங்க முடியாது. சில நேரங்களில் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள், முன்கூட்டியே சொல்லாத காட்சிகளையும் எடுக்கிறார்கள். இதுவும் தவறு தான். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என யார் என்ன சொன்னாலும் நடிகர்கள் அதை தவறாமல் செய்ய வேண்டும் என்ற நிலை தான் சினிமாவில் உள்ளது.

இவ்வாறு நீதுஷெட்டி கூறினார்.

Next Story