பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் தீபாவளியன்று இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்


பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் தீபாவளியன்று இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்
x
தினத்தந்தி 24 Oct 2018 12:15 AM GMT (Updated: 23 Oct 2018 10:30 PM GMT)

தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ளது.

புதுடெல்லி, 

டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 சிறுவர்கள் சார்பில் அவர்களது தந்தைகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், “தீபாவளி, தசரா மற்றும் முக்கிய பண்டிகைகளின்போது பலத்த சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனவே டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்குக்கு எதிராக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், சிவகாசி ஸ்ரீஅய்யப்ப சங்கம் மற்றும் சில இந்து அமைப்புகள் சார்பில் ஏராளமான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

இதன் மீதான விசாரணை நடைபெற்றபோது கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு, பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

பட்டாசு வெடிப்பது தொடர்பான அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. எல்லா தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஆகஸ்டு 28-ந் தேதி வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.

அப்போது நீதிபதிகள் ஒட்டுமொத்தமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்க மறுத்துவிட்டனர். அதே நேரம் நாடு முழுவதும் பட்டாசுகளை வெடிப்பதற்கு பல கட்டுப்பாடுகளையும் விதித்தனர். நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

* குறைந்த அளவு மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் மற்றும் பசுமை பட்டாசுகள் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் அனுமதிக்கப்படுகிறது.

* அதிக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் மற்றும் பசுமை வகைகள் அல்லாத பட்டாசுகளின் தயாரிப்பு மற்றும் விற்பனை தடை செய்யப்படுகிறது.

* பலத்த சத்தம் மற்றும் காற்றை மாசுபடுத்தி குப்பையை ஏற்படுத்தும் சரவெடிகளின் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை.

* தீபாவளி, சீக்கியர்களின் குருபூரப் உள்ளிட்ட பண்டிகைகளின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு 11.55 தொடங்கி இரவு 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும். இது டெல்லிக்கு மட்டுமின்றி இந்தியா முழுவதுக்கும் பொருந்தும்.

* மத்திய, மாநில அரசுகள் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை சமூக அளவில் கொண்டாடுவதற்கு உற்சாகம் அளிக்கவேண்டும். இது போன்று சமூக மையங்களை டெல்லி அரசு ஒரு வாரத்துக்குள் அறிவிக்கவேண்டும். அந்த இடத்தில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும்.

திருமணம் போன்ற விசேஷங்களில் அனுமதிக்கப்பட்ட வகை பட்டாசுகள் மற்றும் பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்படும்.

* குறிப்பிட்ட நேரம் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் பட்டாசு வெடிப்பது என்பதை அனைத்து எதிர் மனுதாரர்கள் குறிப்பாக போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட பகுதியின் போலீஸ் நிலைய தலைமை அதிகாரி இதற்கு பொறுப்பேற்று நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.

* மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பும் 7 நாட்களுக்கு பிறகும் சுற்றுச்சூழலுக்கு பட்டாசு ஏற்படுத்தும் தீங்கு குறித்து ஆய்வு நடத்தவேண்டும்.

* பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆன்-லைன் வழியாக பட்டாசுகளை விற்க தடை விதிக்கப்படுகிறது. தீர்ப்பை மீறி பட்டாசுகளை விற்பனை செய்யும் ஆன்-லைன் நிறுவனங்கள் கோர்ட்டு அவமதிப்பு செய்ததாக கருதப்பட்டு அவர்களுக்கு உரிய அபராதமும் விதிக்கப்படும்.

* பட்டாசுகளில் பேரியம் உப்பு பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

* பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு நிறுவனம் (பெசோ), வெடிபொருட்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து பட்டாசுகளில் பயன்படுத்தும் அலுமினியம் உள்ளிட்ட வேதியியல் பொருட்களை ஆய்வு செய்து இந்த தீர்ப்பு வெளியிட்ட நாளில் இருந்து இரு வாரங்களுக்குள் கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

* தீர்ப்பில் அனுமதிக்கப்பட்டுள்ள பட்டாசுகள் தவிர்த்து ஏற்கனவே தயாரித்த பட்டாசுகள் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனைக்கு அனுமதி கிடையாது.

* தீபாவளி உள்ளிட்ட பல்வேறு மதங்களின் பண்டிகைகள், திருமணம் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் அனுமதிக்கப்பட்ட ரசாயன பொருட்கள் அடங்கிய பட்டாசுகள் மட்டுமே விலைக்கு வாங்குதல், விற்பனை இருப்பு ஆகியவற்றை ‘பெசோ’ நிறுவனம் உறுதி செய்யவேண்டும்.

* தடை செய்யப்பட்ட ரசாயனப்பொருட்கள் அடங்கிய பட்டாசு உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்களின் உரிமங்களை பெசோ நிறுவனம் ரத்து செய்யவேண்டும்.

* அனுமதிக்கப்பட்ட அளவு ஒலியளவுடன் (டெசிபல்) கூடிய பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்வதை மார்க்கெட்டில் பெசோ நிறுவனம் உறுதிப்படுத்தவேண்டும்.

* அமைதி பகுதிகளான மருத்துவமனைகள், நர்சிங் ஹோம், ஆரம்ப சுகாதார மையங்கள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகிய பகுதிகளில் பட்டாசு வெடிக்காமல் இருப்பதை போலீஸ் நிர்வாகம் மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோர் உறுதி செய்யவேண்டும்.

ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு பட்டாசுகளின் இறக்குமதி குறித்து மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

* மத்திய, மாநில அரசுகள் மற்றும் பள்ளிகள் பட்டாசு வெடிப்பதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந்தேதி, தீபாவளிக்கு முன்பாக தேசிய தலைநகர் டெல்லி பகுதி முழுவதும் பட்டாசுகள் விற்பனைக்கு தற்காலிகமாக தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்து, குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனுவை தாக்கல் செய்ய தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதன் பொதுச்செயலாளர் மாரியப்பன் கூறியதாவது:-

பட்டாசு வெடிக்க ஒட்டுமொத்த தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வரவேற்கிறோம். அதே சமயத்தில், பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கியதை பின்பற்றுவது கடினம். ஏனென்றால், மாநிலத்துக்கு மாநிலம் பழக்கவழக்கங்கள் மாறுபடும்.

மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகள் என்ற ஒன்றே கிடையாது. அதை நாங்கள் தயாரிக்க முடியாது. ரசாயன பயன்பாட்டை வேண்டுமானால் குறைக்கலாம். ஆனால், அதற்கும் காலஅவகாசம் தேவைப்படும்.

இத்தகைய கட்டுப்பாடுகளால், பட்டாசு தொழில் நசிந்து வருகிறது. நிறைய பேர் உற்பத்தியை குறைத்து விட்டனர். ஆன்-லைன் விற்பனையை பொறுத்தவரை, உரிமம் பெற்றவர்களை விற்க அனுமதிக்கலாம். பட்டாசுகளில் பாரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை விதித்ததை நீக்கக்கோருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story