2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் ‘பி.எஸ்.4’ ரக வாகன விற்பனைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் ‘பி.எஸ்.4’ ரக வாகன விற்பனைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 Oct 2018 10:45 PM GMT (Updated: 24 Oct 2018 9:21 PM GMT)

2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் ‘பி.எஸ்.4’ ரக வாகனங்களை விற்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

புதுடெல்லி,

மோட்டார் வாகனங்கள் மூலம் காற்று மாசுபடுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக, வாகனங்கள் மாசு வெளியிடுவதை ஒழுங்குபடுத்தும் வகையில் ‘பாரத் ஸ்டேஜ்’ (பி.எஸ்.) என்ற பெயரில் தர நிறுவனம் ஒன்றை அரசு நிறுவியுள்ளது.

இந்த நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், வாகன தயாரிப்பு தொடர்பான பல்வேறு ஒழுங்கு விதிகளை வெளியிடுகிறது. அந்த விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்படும் வாகனங்களை மட்டுமே நாடு முழுவதும் விற்கவும், பதிவு செய்யவும் முடியும்.

அந்தவகையில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பி.எஸ்.4 விதிமுறைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு இருக்கிறது. அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே நாடு முழுவதும் விற்பனையும், பதிவும் செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக அமலில் இருந்த பி.எஸ்.5 விதிமுறைகளை முற்றிலும் கைவிடுவதாக 2016-ல் அறிவித்த மத்திய அரசு, 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பி.எஸ்.6 ரக விதிமுறைகள் அமலுக்கு வரும் எனவும் அறிவித்தது.

ஆனால் பி.எஸ்.4 ரக வாகன விற்பனைக்கு சலுகை காலம் வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

அப்போது, 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் பி.எஸ்.4 ரக வாகனங்கள் விற்பனைக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது முதல் பி.எஸ்.6 ரக வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என கண்டிப்பாக கூறிய நீதிபதிகள், தூய்மையான எரிபொருளை பயன்படுத்துவதற்கான நேரம் இது எனவும் குறிப்பிட்டனர்.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது, ‘2020-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை பி.எஸ்.4 ரக வாகனங்களை தயாரிப்பதற்கு மத்திய அரசு தங்களுக்கு அனுமதி அளித்திருப்பதாகவும், எனவே தாங்கள் இருப்பு வைத்துள்ள வாகனங்களை விற்க உரிய காலம் வழங்கப்பட வேண்டும்’ எனவும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாதிட்டன.

ஆனால் காற்று மாசு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வக்கீல் அபராஜிதா சிங் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். குறிப்பாக 2020-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை தயாரிக்கப்படும் வாகனங்களை விற்பதற்கு அந்த ஆண்டு ஜூன் 30 வரையும், கனரக வாகனங்களை விற்பதற்கு அதே ஆண்டு செப்டம்பர் 30 வரையும் சலுகை காலம் அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.


Next Story