சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல் - தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை


சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல் - தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 29 Oct 2018 10:45 PM GMT (Updated: 29 Oct 2018 8:08 PM GMT)

சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல் எதிரொலியாக, தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகரி,

ஆந்திர மாநில முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சித்தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த 2010-ம் ஆண்டு ஒன்றுபட்ட ஆந்திர மாநில சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அப்போது கோதாவரி ஆற்றின் குறுக்கே பாப்ளியில் மராட்டிய அரசு அணை கட்டும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்காக தனது கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கடந்த 2010-ம் ஆண்டு பாப்ளி நோக்கி பேரணியாக புறப்பட்டார். இவர்களை தர்மாபாத் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், தெலுங்குதேசம் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சந்திரபாபு நாயுடு உள்பட 15 பேர் மீது தர்மாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தர்மாபாத் நீதித்துறை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இதில் சந்திரபாபு நாயுடு உள்பட அனைவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார்.

இந்த வழக்கு மீண்டும் 1-ந் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், இதை விசாரித்து வரும் நீதிபதி நரேந்திர கஜபியேவுக்கு நேற்று ஐதராபாத் கூகட்பள்ளியில் இருந்த கம்ம சங்கம் அனுப்பியதாக கடிதம் ஒன்று வந்தது. அதில் சந்திரபாபு நாயுடுவுக்கு பிறப்பித்த பிடிரவாண்டு மற்றும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் எனவும் எழுதப்பட்டு இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், கடிதத்தை அனுப்பியவரை கைது செய்யும் நோக்கில் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் நீதிபதியின் வீட்டுக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.


Next Story