கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் கைதை கண்டித்து பா.ஜனதா உண்ணாவிரதம்


கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் கைதை கண்டித்து பா.ஜனதா உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 30 Oct 2018 6:33 PM GMT (Updated: 30 Oct 2018 6:33 PM GMT)

கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் கைதை கண்டித்து பா.ஜனதாவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்களும் செல்ல அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று கேரள அரசு அறிவித்தது. இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி ஐப்பசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடந்து 22-ந்தேதிவரை நடை திறக்கப்பட்டு இருந்தது.

அப்போது 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை சன்னிதானத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை அய்யப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும் செய்தி சேகரிக்க சென்ற பெண் செய்தியாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். சபரிமலைக்கு செல்ல முயன்ற கேரள பெண்களின் வீடுகளும் சூறையாடப்பட்டன.

இதையடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை 3,557 கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக 529 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள் முன்பாக நேற்று பா.ஜனதாவினர் அதிகாலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் நூற்றுக் கணக்கில் திரண்டு மாவட்ட போலீஸ் அலுவலகங்களுக்கு ஊர்வலமாகவும் சென்றனர்.

அந்தந்த அலுவலகங்கள் முன்பாக அமர்ந்து தங்களுடைய உண்ணாவிரதத்தை தொடங்கி மாலை வரை நடத்தினர். திருவனந்தபுரத்தில் மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் முன்பாக நடந்த உண்ணாவிரதத்தில் மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, முன்னாள் மத்திய மந்திரியும் கேரளாவின் ஒரே பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான ஓ.ராஜகோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த உண்ணாவிரதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிரபல மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.எம்.லாரன்சின் பேரன் மிலன் லாரன்ஸ் இமானுவலும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பா.ஜனதாவின் உண்ணாவிரத போராட்டத்தால் நேற்று கேரளா முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள் முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Next Story