18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அரசு கொறடா ‘கேவியட்’ மனு


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அரசு கொறடா ‘கேவியட்’ மனு
x
தினத்தந்தி 30 Oct 2018 11:15 PM GMT (Updated: 30 Oct 2018 10:17 PM GMT)

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் விவகாரத்தில், அரசு கொறடா ராஜேந்திரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

எடப்பாடி பழனிசாமியை முதல்–அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கவர்னரிடம் மனு அளித்தனர். இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் உத்தரவிட்டார்.

அவர்களில் ஜக்கையனை தவிர மற்ற 18 எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்கவில்லை. எனவே வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். இதையடுத்து 3–வது நீதிபதியாக நீதிபதி சத்தியநாராயணன் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை இழந்தனர்.

இதையடுத்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தால் அந்த மனு மீதான விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொண்டு தன்னுடைய தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே சபாநாயகர் ப.தனபால் தரப்பில் ஒரு ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story