அ.தி.மு.க. சட்டவிதிகள் திருத்தத்தை ரத்து செய்யக் கோரிய முன்னாள் எம்.பி.யின் மனுவை தேர்தல் கமிஷன் நிராகரித்தது
அ.தி.மு.க. கட்சி சட்டவிதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரும் கே.சி.பழனிசாமியின் மனுவை தேர்தல் கமிஷன் நேற்று நிராகரித்தது. இதுதொடர்பான அனைத்து மனுக்களையும் தேர்தல் கமிஷன் முடித்து வைத்தது.
புதுடெல்லி,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. இதற்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.இதற்கு, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி (அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்) எதிர்ப்பு தெரிவித்தார். புதிய பதவிகள் மற்றும் அ.தி.மு.க. கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று, டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் கமிஷனில் முறையிட்டார்.
இதனை தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டிலும் வழக்கு தொடுத்தார். இந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தனி நீதிபதி காமேஸ்வரராவ் விசாரித்து, 4 வாரத்துக்குள் வழக்கை முடிக்குமாறு தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 21–ந் தேதி உத்தரவிட்டார்.தலைமை தேர்தல் கமிஷன் விசாரிப்பதற்கான இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடிபழனிசாமி ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டின் மற்றொரு அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
அதை நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, ரேகா பாலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தேர்தல் கமிஷனே 4 வாரத்துக்குள் கே.சி.பழனிசாமியின் மனுவை விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 13–ந் தேதி உத்தரவிட்டது.
இந்த விசாரணைக்காக சசிகலா உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து இந்த மனுவை விசாரித்த தலைமை தேர்தல் கமிஷன், நேற்று கே.சி.பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
அ.தி.மு.க. பொதுக்குழுவில் மேற்கொண்ட சட்ட திருத்தங்கள் மற்றும் நியமனங்களை ரத்து செய்யக்கோரும் மனுதாரர் கோரிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மேலும் அ.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தலை தலைமை தேர்தல் கமிஷன் மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கத்தக்கது அல்ல.அரசியல் கட்சிகளின் உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கோ அல்லது மேற்பார்வை செய்வதற்கோ தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது. கட்சியின் சொத்து தொடர்பான புகாருக்கு மனுதாரர் சிவில் கோர்ட்டை அணுகலாம்.
எனவே, மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவில் முடிவெடுக்க இனி ஏதும் இல்லை. இது தொடர்பாக நேரில் அழைத்து விசாரிக்கவும் தேவை இல்லை. இது தொடர்பான அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.