ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் : சி.பி.ஐ. கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு


ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் : சி.பி.ஐ. கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு
x
தினத்தந்தி 1 Nov 2018 5:30 AM IST (Updated: 1 Nov 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

ஏர்செல்-மேக்சிஸ் பண மோசடி வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்து உள்ளது.

புதுடெல்லி,

ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளன. கடந்த 25–ந் தேதி ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் தன்னை அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் கோரியதன் அடிப்படையில் கடந்த மே மாதம் 30–ந் தேதி முதல் பல்வேறு நேரங்களில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு அவரை கைது செய்ய தடை விதித்தது. கடைசியாக நவம்பர் 1–ந் தேதி (அதாவது இன்று) வரை இத்தடையை நீட்டித்தது.

இதற்கிடையே அமலாக்கத்துறை நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘ப.சிதம்பரம் சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர். அவரை காவலில் எடுத்து விசாரிக்காத வரை இந்த வழக்கில் உண்மையை வெளியே கொண்டு வர இயலாது. மேலும் அவர் இந்த வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு சி.பி.ஐ. கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.


Next Story