தொழில் நடத்த சாதகமான நாடுகளில் இந்தியா 77-வது இடம் தென்கிழக்கு ஆசியாவில் முதல் இடம்
உலக வங்கி ஆய்வறிக்கை ஒன்றின்படி சர்வதேச அளவில் தொழில் நடத்த சாதகமான நாடுகளில் இந்தியா 23 படிகள் முன்னேறி 77-வது இடத்திற்கு வந்து இருக்கிறது.
புதுடெல்லி
உலக வங்கி, சர்வதேச அளவில் தொழில் புரிய சாதகமான நாடுகள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 190 நாடுகளில் இந்த ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வின் முடிவுகள் இந்தியாவிற்கு நற்பெயரை பெற்றுத் தந்துள்ளன.
உலக வங்கியின் தர வரிசைப்படி, தொழில் நடவடிக்கைகளுக்கு உகந்த நாடுகளில் இந்தியா இப்போது 23 படிகள் முன்னேறி 77-வது இடத்திற்கு வந்துள்ளது. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு அன்னிய முதலீடுகளை அதிகம் ஈர்க்க நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் இது மிக முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
தொழிலுக்கு உகந்த 190 நாடுகளில் தற்போது 77-வது இடத்தில் இருக்கும் இந்தியா முதல் முறையாக தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகள் குழுவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
உலக வங்கியின் தரவரிசையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா மொத்தம் 53 படிகள் முன்னேறி இருக்கிறது. இந்த அளவிற்கு செயல்திறனை வெளிப்படுத்தி உள்ள மற்றொரு நாடு பூட்டான் மட்டுமே. குறிப்பாக கட்டுமான துறையில் உள்ள இடர்களைக் களைய மேற்கொண்ட நடவடிக்கைகளால் அந்த துறையில் மட்டும் இந்தியா 129 இடங்கள் முன்னேறி 52-வது இடத்தைப் பிடித்துள்ளது.
மூன்று முக்கிய பொருளாதார குறியீடுகளில் இந்தியா இப்போது முன்னணி 25 நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. அதாவது மின்சாரம், கடன் வசதி பெறுதல் மற்றும் சிறுபான்மையினராக இருக்கும் முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாத்தல் ஆகிய மூன்று அம்சங்களில் நம் நாடு முதல் 25 இடங்களுக்குள் இருப்பதாக மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை கூறி இருக்கிறது.
Related Tags :
Next Story