ஏர்செல் மேக்சிஸ் வழக்கு : முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிப்பு!
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை நவம்பர் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி
2006ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், விதிமுறைகளை மீறி ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும், இந்த முறைகேட்டுக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் அடிப்படையில், அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி இருவரும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு செய்த நிலையில், அவர்களை அக்டோபர் 8ஆம் தேதி வரையும், பின்னர் நவம்பர் 1ஆம் தேதி வரையும் கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முன்ஜாமீன் வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் நேரில் ஆஜரானார். அவரையும், கார்த்தி சிதம்பரத்தையும், கைது செய்வதற்கான தடையை, நவம்பர் 26ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Related Tags :
Next Story