“அதென்ன பறவை எச்சமா?” பிரதமர் மோடியை ட்விட்டரில் கேலி செய்த ரம்யா, பா.ஜனதா கண்டனம்
சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு கீழ் பிரதமர் மோடி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரம்யா, “அதென்ன பறவை எச்சமா?” என கேலி செய்துள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மண்டியா பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா மீண்டும் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருப்பினும், தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் திறம்பட செயல்பட்டு வருகிறார். அத்துடன், திறமையாக செயல்பட்டு சமூக வலைத்தளங்களிலும் கட்சி நடவடிக்கைகளை அவ்வப்போது பதிவிட்டு இளைஞர், இளம்பெண்களை கவர்ந்தார். இதனையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சமூக வலைத்தள பிரிவு தலைவியாக ரம்யா நியமிக்கப்பட்டார். கடந்த செப்டம்பரில் பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியதற்காக திவ்யா ஸ்பந்தனா மீது தேசவிரோத வழக்கு தொடரப்பட்டது.
பிரதமர் மோடியை திருடன் என்று அவர் வெளியிட்ட பதிவு ராகுல் காந்தியையும் அதிருப்தி அடைய செய்ததாகவும், அதனால் அவருடைய பொறுப்பு பறிபோனதாகவும் தகவல் வெளியாகியது.
இந்த சர்ச்சை முடிந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் ரம்யா. சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு கீழ் பிரதமர் மோடி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரம்யா, “அதென்ன பறவை எச்சமா?” என கேலி செய்துள்ளார்.
இந்தியாவின் இரும்பு மனிதர்‘ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. சர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒற்றுமைப்படுத்தியதை குறிப்பிடும்வகையில், ‘ஒற்றுமை சிலை’ என்று இது அழைக்கப்படுகிறது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதற்கிடையே ரூ. 3 ஆயிரம் கோடி செலவில் இந்த சிலை தேவைதானா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. மறுபுறம் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு இதுபோன்ற சிலையை எழுப்பாதது ஏன்? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை ரம்யா (திவ்யா ஸ்பந்தனா) சர்தார் வல்லபாய் படேலின் உலகின் மிகப்பெரிய சிலையின் பாதத்துக்கு கீழ் நரேந்திர மோடி நின்று கொண்டிருக்கும் படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ள செய்தி பெரும் சர்ச்சையாகியுள்ளது. பெரிய சிலையின் மிகப்பெரிய பாதங்களுக்கு அருகில் சிறிய உருவமாக பிரதமர் மோடி நின்று கொண்டிருப்பதை, “அது என்ன பறவை எச்சமா?” என்று கேலி செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருடைய பதிவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுகிறது. ரம்யாவின் பதிவுக்கு பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story