போட்டியிலிருந்து விலகிய பா.ஜனதா வேட்பாளர் குமாரசாமி மனைவிக்கு ஆதரவாக பிரசாரம்
கர்நாடக இடைத்தேர்தல் போட்டியிலிருந்து விலகிய பா.ஜனதா வேட்பாளர், முதல்வர் குமாரசாமி மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
பெங்களூரு,
கர்நாடகாவில் ராமநகர் மற்றும் ஜமகண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. சட்டசபைத் தேர்தலில் இரு தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி ராமநகர் தொகுதியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அங்கு குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரசில் இருந்து விலகி 3 வாரங்களுக்கு முன் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்த எல். சந்திரசேகர், அந்த கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவருக்கும் அனிதா குமாரசாமிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. இடைத்தேர்தல் பிரசாரம் மாலை முடிந்தது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக பா.ஜனதா வேட்பாளர் எல். சந்திரசேகர் போட்டியில் இருந்து விலகினார். மந்திரி டி.கே.சிவக்குமாரின் சகோதரரும், எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் முன்னிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர்ந்தார். அப்போது அவர் எடியூரப்பா மீது சரமாரியாக குற்றம் சாட்டினார். குமாரசாமியின் மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். சனிக்கிழமை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியில் இருந்து விலகி இருப்பது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story