அயோத்தியில் ராமர் கோவில் விவகாரம் “தேவைப்பட்டால் மிகப்பெரிய போராட்டம்” ஆர்.எஸ்.எஸ்.


அயோத்தியில் ராமர் கோவில் விவகாரம் “தேவைப்பட்டால் மிகப்பெரிய போராட்டம்” ஆர்.எஸ்.எஸ்.
x
தினத்தந்தி 2 Nov 2018 6:36 PM IST (Updated: 2 Nov 2018 6:36 PM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் தேவைப்பட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.

தானே,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வலியுறுத்தி வருகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இவ்விவகாரம் தலைதூக்கியுள்ளதை காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது. தேர்தல்கள் வரும்போதுதான் பா.ஜனதாவிற்கு ராமர் கோவில் நினைவிற்கு வரும் என்று காங்கிரஸ் சாடியுள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநாடு மராட்டியத்தில் நடைபெற்றது.

இதன் முடிவில் அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி பேசுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் தேவைப்பட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பாக நீண்ட காலமாக வழக்கு நடந்து வருகிறது. அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான மனுக்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெறுகிறது. அக்டோபர் 29-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது விசாரணையை வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது.

இதனை குறிப்பிட்டு பையாஜி ஜோஷி பேசுகையில்,  “நாங்கள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறோம். அக்டோபர் 29-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தீபாவளிக்கு முன்னதாக நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. தேவைப்பட்டால் ராமர் கோவில் விவகாரத்தில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க தயங்க மாட்டோம். இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளதால் எங்களுக்கு தடைகள் உள்ளது,” என்று கூறியுள்ளார். 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் விவகாரத்தில் அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை. நாங்கள் சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு மதிப்பளிக்கிறோம், அதனால்தான் காலதாமதம் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம், இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மோகன் பகவத் மற்றும் பா.ஜனதா தலைவர் அமித் ஷா இடையிலான சந்திப்பின் போது ராமர் கோவில் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரம் தொடர்பாக பேசப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். 2019 பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story