சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு 59 நிமிடங்களில் ரூ.1 கோடி கடன் பெறலாம் - புதிய இணையதளத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்


சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு 59 நிமிடங்களில் ரூ.1 கோடி கடன் பெறலாம் - புதிய இணையதளத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 Nov 2018 11:45 PM GMT (Updated: 2 Nov 2018 10:31 PM GMT)

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு 59 நிமிடங்களில் ரூ.1 கோடிவரை கடன் பெறுவதற்கான புதிய இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

புதுடெல்லி,

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு எளிதாக கடன் பெறும் திட்டத்தின் தொடக்க விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று இத்திட்டத்துக்கான பிரத்யேக இணையதளத்தை தொடங்கிவைத்தார்.

பிறகு அவர் பேசியதாவது:-

சிறு, குறு, நடுத்தர தொழில் தொடங்க எளிதாக கடன் பெறும்வகையில் இந்த இணையதளம் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பித்து, 59 நிமிடங்களில் ரூ.1 கோடிவரை கடன் பெறலாம். நெரிசல் இன்றி எளிதாக கடன் பெற இதில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

நாட்டின் உள்கட்டமைப்பு துறைக்கு சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பலம் சேர்த்துள்ளன. வேளாண்மைக்கு பிறகு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிப்பது, இந்த தொழில்கள்தான்.

எளிதாக தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா பல இடங்கள் முன்னேறி உள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா, பொருளாதார வல்லரசாக ஆகி உள்ளது.

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்காக மத்திய அரசு 12 முடிவுகளை எடுத்துள்ளது. இவை தீபாவளி பரிசாக அமையும். சிறு தொழில்களுக்கு புதிய தொடக்கமாக அமையும். 4-வது தொழில் புரட்சிக்கு தலைமை தாங்க இந்தியா தயாராக உள்ளது என்று மோடி பேசினார்.

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மத்திய அரசு அளிக்கும் கடன் உதவிகள் பற்றி நாடு முழுவதும் 100 மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று மத்திய மந்திரிகள் விளக்க உள்ளனர். இது, துறையின் வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்ப்பதுடன், வேலைவாய்ப்பை பெருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story