சபரிமலை கோவிலின் அன்றாட நடவடிக்கைகளில் கேரள அரசு தலையிடக் கூடாது- கேரள ஐகோர்ட்


சபரிமலை கோவிலின் அன்றாட நடவடிக்கைகளில் கேரள அரசு தலையிடக் கூடாது- கேரள ஐகோர்ட்
x
தினத்தந்தி 5 Nov 2018 10:23 AM GMT (Updated: 5 Nov 2018 10:23 AM GMT)

சபரிமலை கோவிலின் அன்றாட நடவடிக்கைகளில் கேரள அரசு தலையிடக் கூடாது என கேரள ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு ஐயப்ப பக்தர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் கேரளாவில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்தபோது 2 இளம்பெண் போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானம் நோக்கி செல்ல முயன்றனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் பாதி வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.

மேலும் சபரிமலையில் பக்தர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி ஐயப்ப பக்தர்களை விரட்டி அடித்தனர். இதனால் சபரிமலையில் பதட்டமான சூழ்நிலை உருவானது.

அதே சமயம் சபரிமலை சன்னிதானத்தில் தந்திரிகள், கோவில் ஊழியர்களும் 18ம் படி அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் பக்தர்களை சன்னிதானத்துக்குள் நுழைய விட மாட்டோம் என்று அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைந்தால் கோவிலை பூட்டி சாவியை ராஜகுடும்பத்திடம் ஒப்படைப்போம். கோவில் நடையை சாத்தி சுத்தி கலச பூஜை நடத்தப்படும் என்று தந்திரி கண்டரரு ராஜீவரு அறிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. நடைதிறப்பின்போது இளம்பெண் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என்று ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

சன்னிதானத்தில் 50 வயதிற்கு மேற்பட்ட 15 பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபத்தப்பட்டு உள்ளனர். முதல் முறையாக இங்கு பாதுகாப்பு பணியில் பெண்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். சபரி மலைச் எல்லும் பாதை முழுவதும் 2300 போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில்  சன்னிதானம் பகுதியில் ஆகம விதிகளை மீறி, பெண்களை அனுமதித்தால், நடை உடனடியாக சாத்தப்படும் என்று மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மிரட்டல் விடுத்துள்ளார். சபரிமலை செல்லும் பக்தர்களையோ ஊடகத்தினரையோ தடுத்து நிறுத்தக் கூடாது என கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், சபரிமலை கோவிலின் அன்றாட நடவடிக்கைகளில் கேரள அரசு தலையிடக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரில் சம்மந்தப்பட்ட போலீசார் மீது துறைரீதியான விசாரணை நடத்தவும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story