தீவிரவாதத்தில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது; காஷ்மீர் ஆளுநர்


தீவிரவாதத்தில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது; காஷ்மீர் ஆளுநர்
x
தினத்தந்தி 5 Nov 2018 11:15 AM GMT (Updated: 5 Nov 2018 11:15 AM GMT)

தீவிரவாதத்தில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது என ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர் கூறியுள்ளார்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஆளுநர் சத்யபால் மாலிக் ஜம்முவில் செயலகத்தில் இன்று நடந்த ராணுவ மரியாதை அணிவகுப்பில் கலந்து கொண்டார்.  அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது அரசின் சாதனைகளை பற்றி குறிப்பிட்டார்.  அவர், 3 (கடந்த) மாதங்களில், தீவிரவாதத்தில் ஒரே ஒரு இளைஞர் இணைந்துள்ளார்.  இந்த கால கட்டத்தில் வேறு எவரும் தீவிரவாத குழுவில் இணையவில்லை என கூறினார்.

இதுபற்றி மக்களவையில் மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், தெற்கு காஷ்மீரின் 4 மாவட்டங்களான அனந்த்நாக் (14), புல்வாமா (35), சோபியான் (23), குல்காம் (15) ஆகியவற்றில் இருந்து 2018ம் ஆண்டில் (ஜூலை 20ந்தேதி வரை) 87 பேர் தீவிரவாதத்தில் இணைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டில் அதிகளவாக 127 இளைஞர்கள் தீவிரவாதத்தில் இணைந்துள்ளனர்.  இது கடந்த 2010ம் ஆண்டில் இருந்து மிக அதிக எண்ணிக்கை ஆகும்.  கடந்த 2016ம் ஆண்டில் 88 காஷ்மீரி இளைஞர்கள் தீவிரவாதத்தில் இணைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story