குஜராத் தலைமைச் செயலகத்துக்குள் புகுந்த சிறுத்தை 12 மணி நேரங்களுக்கு பின்னர் சிக்கியது


குஜராத் தலைமைச் செயலகத்துக்குள் புகுந்த சிறுத்தை 12 மணி நேரங்களுக்கு பின்னர் சிக்கியது
x
தினத்தந்தி 5 Nov 2018 2:59 PM GMT (Updated: 5 Nov 2018 2:59 PM GMT)

குஜராத் தலைமைச் செயலகத்துக்குள் புகுந்த சிறுத்தை 12 மணி நேரங்களுக்கு பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.


காந்திநகர், 

காந்தி நகரில் குஜராத் அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள 50 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படும். வன விலங்குகள் அவ்வப்போது நகருக்குள் புகுந்து பீதியை ஏற்படுத்துவதும் உண்டு. இதுபோன்று, தலைமைச் செயலகத்திற்குள் அதிகாலை 2 மணி அளவில் சிறுத்தை ஒன்று இரும்பு கேட்டுக்கு அடியில் உள்ள இடைவெளி வழியாக நுழைந்தது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. 

இதைக்கண்ட கட்டுப்பாட்டு அறை போலீசார் காவல்துறையை உஷார்படுத்தினர். இதையடுத்து தலைமை செயலகத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. உடனடியாக 350–க்கும் மேற்பட்ட வன இலாகாவினரும், போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். சிறுத்தையை பிடிக்க கூண்டும் வைக்கப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  இருப்பினும் சிறுத்தையை கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. தலைமைச் செயலக வளாகத்துக்குள் மரங்களும், புதர்களும் இருந்ததால் சிறுத்தை எங்கு சென்றது என்பது தெரியவில்லை. நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் அங்குள்ள கவர்னர் மாளிகையின் பண்ணை பகுதிக்குள் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வன இலாகாவினர் அந்த சிறுத்தையின் மீது மயக்க ஊசியை செலுத்தினர். இதனால் சிறுத்தை மயக்கம் அடைந்து கீழே சாய்ந்தது. அந்த சிறுத்தையை வன இலாகாவினர் மீட்டு ஒரு கூண்டில் ஏற்றினர். 12 மணி நேர தேடுதலுக்கு பின்னர் பிடிப்பட்ட சிறுத்தை அது வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டது. தலைமை செயலகத்திற்குள் சிறுத்தை புகுந்தது காரணமாக பணியாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாததால் பணிகள் பாதிக்கப்பட்டது.


Next Story