சபரிமலை கோவிலில் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்


சபரிமலை கோவிலில் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்  மீது தாக்குதல்
x
தினத்தந்தி 6 Nov 2018 9:34 AM GMT (Updated: 6 Nov 2018 9:34 AM GMT)

சபரிமலை கோவிலில் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் அய்யப்ப பக்தர்களால் தாக்கப்பட்டார்.

சபரிமலை, 

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதற்கு அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், திருவாங்கூர் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் யாரும் வராததால், அசம்பாவிதம் எதுவும் இன்றி நேற்று கோவிலில் பூஜை அமைதியாக நடைபெற்றது.

இந்த நிலையில், சபரிமலைக்கு 50 வயதுக்கு கீழ் உள்ள பெண் ஒருவர் தரிசனம் செய்ய வந்துள்ளார் என வதந்தி பரவியது.  இதனால், பக்தர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பக்தர்களின் போராட்டத்தை படம் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த மலையாள தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டார். போராட்டம் நடைபெற்ற இடம் அருகே இருந்த ஒரு கட்டிடத்தின் மேல் இருந்து, போராட்டக்காட்சிகளை படம் பிடித்த ஒளிப்பதிவாளரை நோக்கி தேங்காய், உள்ளிட்ட சில பொருட்களை போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் வீசினர். எனினும், அதிர்ஷ்டவசமாக ஒளிப்பதிவாளருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு எதுவும் தற்போது வரை பதிவு செய்யவில்லை. 

இதற்கிடையே, சபரிமலைக்கு வந்த பெண், 52 வயதான லலிதா என அடையாளம் தெரிந்தது. தனது குடும்ப உறுப்பினர்களுடன் லலிதா என்ற பெண் வந்ததாக போலீசார் பின்னர் தெரிவித்தனர். முன்னதாக, கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி ஆறு நாட்கள் சபரிமலை கோவில் திறக்கப்பட்டிருந்த சமயத்திலும், பத்திரிகையாளர்கள், அய்யப்ப பக்தர்களால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டனர். 

Next Story