மரிக்கும் மனித நேயம்; தாய் நாயின் கண்முன்னே 4 குட்டிகள் எரித்துக் கொலை போலீஸ் வழக்குப்பதிவு


மரிக்கும் மனித நேயம்; தாய் நாயின் கண்முன்னே 4 குட்டிகள் எரித்துக் கொலை போலீஸ் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 7 Nov 2018 9:49 AM GMT (Updated: 7 Nov 2018 9:49 AM GMT)

ஐதராபாத்தில் தாய் நாயின் முன்னே அதனுடைய 4 குட்டிகளை எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விலங்குகளை கொடூரமான முறையில் சித்தரவதை செய்து, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடும் கொடூரமனம் படைத்தவர்களின் வெறிச்செயல் அவ்வப்போது வெளியுலகிற்கு தெரியவருகிறது. இதுபோன்ற மனிதநேயம் மரிக்கும் சம்பவம் ஐதராபத்தில் நடைபெற்றுள்ளது.

தாய் நாயின் முன்னே 4 குட்டி நாய்கள் எரிக்கப்படும் கொடூரமான சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமையன்று இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. நாய் குட்டிகளை எரித்தவர்கள் யார்? எத்தனை பேர் இந்த கொடூரத்தை நிகழ்த்தினர் என்பது தெரியவரவில்லை. குட்டிகள் எரியும் காட்சியை உதவ முடியாத பார்க்கும் தாய் நாய் கத்தி அழுது கண்ணீர் விட்டு அங்கிருந்து செல்கிறது.

இதுதொடர்பான புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் வெளியானதும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் விலங்குகள் நல ஆர்வலர்களை உஷார் படுத்தியுள்ளனர். அவர்கள் ஒரு குட்டியை மட்டும் காயங்களுடன் காப்பாற்றியுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் அதுவும் உயிரிழந்து விட்டது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களிலும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஐதராபாத் போலீஸ் வழக்குப்பதிவு செய்து இந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் யாரென்று விசாரித்து வருகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸ் ஆய்வு செய்து வருகிறது.

இதுபோன்று நாய் குட்டிகள் எரிக்கப்பட்ட சம்பவம் 2016-ம் ஆண்டும் ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது போலீஸ் கைது நடவடிக்கையை மேற்கொண்டது. 2017-ல் சென்னையிலும் மருத்துவ மாணவர்கள் நாயை மாடியிலிருந்து தூக்கி வீசிய சம்பவமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story