கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கூட்டணி 4 இடங்களில் வெற்றி


கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கூட்டணி 4 இடங்களில் வெற்றி
x
தினத்தந்தி 7 Nov 2018 10:30 PM GMT (Updated: 7 Nov 2018 10:09 PM GMT)

கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி 4 இடங்களில் வெற்றி பெற்றது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் எம்.பி.க்களாக இருந்த எடியூரப்பா(சிவமொக்கா), ஸ்ரீராமுலு(பல்லாரி), புட்டராஜூ(மண்டியா) ஆகியோர், அங்கு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.

முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர், சென்னப்பட்டணா ஆகிய 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் ராமநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ஜமகண்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சித்துநியாமகவுடா சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

இதனால் காலியான மண்டியா, பல்லாரி, சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 3-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

3 எம்.பி. தொகுதி முடிவுகள்

பதிவான ஓட்டுகள் நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டன. 5 தொகுதிகளில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் பா.ஜனதா வெற்றி பெற்றது. அங்கு அந்த கட்சியின் வேட்பாளரான எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா 5 லட்சத்து 43 ஆயிரத்து 306 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மது பங்காரப்பா தோல்வி அடைந்தார். இதன் மூலம் சிவமொக்கா தொகுதியை பா.ஜனதா தக்க வைத்தது.

மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் சிவராமேகவுடா 5 லட்சத்து 69 ஆயிரத்து 347 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் சித்தராமையா தோல்வி அடைந்தார்.

பல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 6 லட்சத்து 28 ஆயிரத்து 365 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ஜனதா வேட்பாளர் சாந்தா தோல்வியை தழுவினார்.

முதல்-மந்திரி மனைவி வெற்றி

ராமநகர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிட்ட முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 43 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த பா.ஜனதா வேட்பாளர் சந்திரசேகருக்கு 15 ஆயிரத்து 906 ஓட்டுகள் விழுந்தன.

இந்த வெற்றியின் மூலம் கர்நாடகத்தில் முதல்-மந்திரியுடன், அவரது மனைவியும் சட்டசபை உறுப்பினராகி உள்ளார்.

ஜமகண்டி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் நியாமகவுடா 97 ஆயிரத்து 17 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். பா.ஜனதா வேட்பாளர் ஸ்ரீகாந்த் குல்கர்னி 57 ஆயிரத்து 537 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.

இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளதால், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பது அந்த கட்சி தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story