பெங்களூருவில் தேவேகவுடாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு


பெங்களூருவில் தேவேகவுடாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
x
தினத்தந்தி 8 Nov 2018 10:15 PM GMT (Updated: 8 Nov 2018 8:06 PM GMT)

பா.ஜனதாவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது தொடர்பாக, தேவேகவுடாவுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு,

பெங்களூருவில் தேவேகவுடா- குமாரசாமியை நேற்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது பற்றி ஆலோசித்தனர்.

அகில இந்திய அளவில் பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா, கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோரை பெங்களூருவில் நேற்று மாலை சந்தித்து பேசினார்.

அப்போது அவர்கள், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்பது பற்றி ஆலோசித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடு தழுவிய அளவில் மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். அந்த நோக்கத்தின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை சந்தித்து ஆசி மற்றும் ஆதரவு பெற்றேன். நான் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு தேவேகவுடா முழு ஆதரவு தெரிவித்தார்.

மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அகற்றுவது தான் எங்கள் நோக்கம். அவர் சில ஆலோசனைகளை கூறினார். மதசார்பற்ற கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது குறித்து விவாதித்தோம்.

இதற்கு முன்பு 1996-ம் ஆண்டு மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைத்தது. தேவேகவுடா பிரதமராக இருந்தார். இந்த அணிக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு வழங்கியது. நான் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினேன். இதனால் நாங்கள் இணைந்து பணியாற்றிய அனுபவம் உள்ளது.

பிரதமர் பதவியை பற்றி நாங்கள் தற்போது ஆலோசிக்கவில்லை. நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பது தான் எங்களின் முக்கிய நோக்கம்.

நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்நோக்குகிறார்கள். அதற்கு கர்நாடகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவே நல்ல உதாரணம் ஆகும். இங்கு காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஆதரித்து ஓட்டுப்போட்டுள்ளனர். வருகிற ஜனவரியில் மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஒரு பெரிய மாநாட்டை நடத்துகிறார். அதே போல் கர்நாடகத்திலும் ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநாடு நடத்த முடிவு செய்துள்ளது. ஆந்திராவில் எங்கள் கட்சி சார்பில் மாநாடு நடத்துகிறோம். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று சந்திரபாபுநாயுடு கூறினார்.

தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடு முழுவதும் மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சந்திரபாபுநாயுடு இறங்கியுள்ளார். இந்த முயற்சிக்கு தேசிய கட்சியான காங்கிரஸ் ஒத்துழைக்க வேண்டும். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான சூழல் உள்ளது என்று தேவேகவுடா கூறினார்.



Next Story