இந்திய ராணுவத்தில், முதல் முறையாக 3 புதிய ரக பீரங்கிகள்


இந்திய ராணுவத்தில், முதல் முறையாக 3 புதிய ரக பீரங்கிகள்
x
தினத்தந்தி 9 Nov 2018 12:22 PM GMT (Updated: 9 Nov 2018 12:22 PM GMT)

இந்திய ராணுவத்தில், கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக புதிய ரக பீரங்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

நாசிக்,

1980களில் சுவீடன் தயாரிப்பான போபர்ஸ் பீரங்கிகள் ராணுவத்தில் இணைக்கப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க தயாரிப்பான எம்-777 அல்ட்ரா லைட் ஹோவிட்சர் (M777 Ultra-Light Howitzer) மற்றும் தென்கொரிய தயாரிப்பான கே9 வஜ்ரா-டி (K9 Vajra-T) ஆகிய பீரங்கிகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ தளபதி பிபின் ராவத் முன்னிலையில், இந்த பீரங்கிகள் ராணுவத்தில் இணைக்கப்பட்டன.

இதேபோல, 2016 நவம்பரில் எம்777 அல்ட்ராலைட் ஹோவிட்சர் ரகத்தை சேர்ந்த 145 பீரங்கிகளை வாங்க 737 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 பீரங்கிகள் நேரடியாக இறக்குமதி செய்யப்படும். 120 பீரங்கிகள் மஹிந்திரா நிறுவனத்தின் கூட்டில் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும். 4 டன் எடை மட்டுமே கொண்ட இந்த எம்777 ரக பீரங்கிகளை ஹெலிகாப்டர் மூலம் மலைப்பாங்கான பகுதிகளுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரலில், தென்கொரியாவின் ஹன்வா டெக்வின் (Hanwa Techwin) நிறுவனமும், இந்தியாவின் எல் அண்டு டி நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி, கே9 வஜ்ரா-டி (K9 Vajra-T) ரகத்தை சேர்ந்த 10 பீரங்கிகள் நேரடியாக தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும். 90 பீரங்கிகளை எல் அண்டு டி இந்தியாவில் தயாரித்து வழங்கும். 100 பீரங்கிகளுக்கான தொகை மொத்தம் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாயாகும்.

Next Story