ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடி கேட்கவில்லை - மத்திய அரசு விளக்கம்


ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடி கேட்கவில்லை - மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 9 Nov 2018 9:00 PM GMT (Updated: 9 Nov 2018 8:11 PM GMT)

ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடி கேட்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய பா.ஜனதா அரசு நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிப்பதாகவும், இதை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடி நிதி கேட்டு இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த தகவலை முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரமும் வெளியிட்டதுடன், மத்திய அரசு ரிசர்வ் வங்கியை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆனால் இந்த தகவலை மத்திய அரசு மறுத்து இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு பணம் கேட்டுள்ளதாக பல்வேறு தவறான தகவல்கள் ஊடகங்களில் பரவி வருகின்றன. ஆனால் அரசிடம் போதுமான நிதி கையிருப்பு உள்ளது. எனவே ஊடகங்களில் வெளியானது போல ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.3.6 லட்சம் கோடியோ அல்லது ரூ.1 லட்சம் கோடியோ நிதி கேட்கும் பரிந்துரை எதுவும் அரசிடம் இல்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘அரசின் நிதி பற்றாக்குறை கடந்த 2013-14-ம் நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருந்தது. பின்னர் 2014-15-ம் ஆண்டிலிருந்து இந்த பற்றாக்குறை விகிதத்தை அரசு வெற்றிகரமாக குறைத்து வருகிறது. 2018-19-ம் ஆண்டு முடிவில் நிதி பற்றாக்குறை விகிதம் 3.3 சதவீதமாக இருக்குமாறு வரையறுத்துள்ளோம்’ என்று தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு ரிசர்வ் வங்கியில் இருந்து நிதி எதுவும் கேட்கவில்லை எனக்கூறியுள்ள சுபாஷ் சந்திரா கார்க், ரிசர்வ் வங்கியின் பொருத்தமான பொருளாதார மூலதன கட்டமைப்பை வரையறுப்பது தொடர்பான பரிந்துரை மட்டுமே தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.



Next Story