போலீசாரை ஏமாற்றி விட்டு சபரிமலை சென்றார் பா.ஜனதா தலைவர்


போலீசாரை ஏமாற்றி விட்டு சபரிமலை சென்றார் பா.ஜனதா தலைவர்
x
தினத்தந்தி 9 Nov 2018 9:15 PM GMT (Updated: 9 Nov 2018 8:17 PM GMT)

பா.ஜனதா தலைவர் ஒருவர் போலீசாரை ஏமாற்றி விட்டு சபரிமலை சென்றார்.

சபரிமலை,

திருவாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் பாலராமவர்மாவின் பிறந்த தினத்தையொட்டி கடந்த 5-ந்தேதி மாலை சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 6-ந்தேதி சிறப்பு பூஜைக்கு பின்னர் நடை சாத்தப்பட்டது.

இதையொட்டி பா.ஜனதா மற்றும் சங் பரிவார அமைப்புகளின் தலைவர்கள் யாரும் அய்யப்பன் கோவிலுக்கு சென்று விடக்கூடாது என கருதி பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் கேரள மாநில பாரதீய ஜனதா மூத்த தலைவர் கே.சுரேந்திரன் தலைமையிலான குழுவினர், போலீசாரை ஏமாற்றி விட்டு, அடர்ந்த காட்டின் வழியே இரவு நேரத்தில் 15 மணி நேரம் நடந்து சபரிமலையை சென்று அடைந்துள்ளனர் என்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

அவர்கள் போலீஸ் வலையில் சிக்காமல், பத்தனம்திட்டா- பம்பா நெடுஞ்சாலையில் இருந்து காட்டுக்குள் புகுந்தனர். யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், கொடிய விஷ பாம்புகளால் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருந்தபோதும் அவர்கள் துணிச்சலுடன் நடந்து சென்று 4-ந்தேதி நள்ளிரவு சபரி மலையை அடைந்து இருக்கிறார்கள்.

அதன்பின்னர்தான் போலீசுக்கு இது பற்றிய தகவல் கிடைத்து அவர்கள் மறுநாள் (5-ந்தேதி) மதியம் சன்னிதானம் சென்றிருக்கிறார்கள் என தகவல்கள் கூறுகின்றன.



Next Story