பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ‘பிரதமர் மோடியை தண்டிக்க மக்கள் காத்து இருக்கிறார்கள்’ - சிவசேனா தாக்கு


பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ‘பிரதமர் மோடியை தண்டிக்க மக்கள் காத்து இருக்கிறார்கள்’ - சிவசேனா தாக்கு
x
தினத்தந்தி 9 Nov 2018 10:30 PM GMT (Updated: 9 Nov 2018 8:35 PM GMT)

பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் பிரதமர் மோடியை தண்டிக்க மக்கள் காத்து இருப்பதாக சிவசேனா கூறியுள்ளது.

மும்பை,

பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட 2 ஆண்டுகள் நிறைவை தொடர்ந்து பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா செய்தி தொடர்பாளர் மனிஷா கயாண்டே கூறியதாவது:-

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். ஆனால் இந்த நடவடிக்கையின் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இழந்திருப்பது குறித்து விளக்கம் அளிக்க அவர் தவறிவிட்டார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பயங்கரவாதம் ஒழியும், கள்ள நோட்டுகள் ஒழியும் என கூறப்பட்டது. ஆனால் இதுவரை அவர்கள் கூறியது நடந்ததாக தெரியவில்லை.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை கடும் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் நிலைமை படுமோசமாக மாறியுள்ளது. இதற்காக பிரதமர் மோடியின் அரசை தண்டிக்க மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் இடையே தற்போது நிலவும் சர்ச்சையால் நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

சிவசேனாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஷிஸ் தியோ ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

பா.ஜனதா அரசின் நீண்டகால கூட்டாளியான சிவசேனா பணமதிப்பு நீக்க தோல்வி குறித்து துல்லியமாக உண்மையை வெளியிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வருங்காலத்திலும் பா.ஜனதாவும், சிவசேனாவும் ஒரே படகில் தான் பயணிப்பார்களா அல்லது வேறு பாதையை தேர்ந்தெடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இதற்கு காலம் தான் பதில் செல்லும் என்று அவர் கூறினார்.



Next Story