பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு - தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க தயார் என பேட்டி


பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு - தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க தயார் என பேட்டி
x
தினத்தந்தி 9 Nov 2018 10:45 PM GMT (Updated: 9 Nov 2018 8:40 PM GMT)

பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேசிய டி.டி.வி.தினகரன் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார்.

பெங்களூரு,

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

அவருடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, வெற்றிவேல், முத்தையா, சுந்தரராஜன், ஜெயந்தி பத்மநாபன் உள்பட 12 பேர் சென்றனர்.

பகல் 12.15 மணிக்கு சிறைக்குள் சென்ற அவர் கள் 2.10 மணியளவில் வெளியே வந்தனர். சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. இதன் பிறகு டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினேன். எங்களிடையே குழப்பம் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அது தவறானது. எங்களிடையே எந்த குழப்பமும் இல்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் மேல்முறையீடு வேண்டாம், மக்களை சந்திப்பது என்று முடிவு எடுத்தோம். அந்த முடிவை சசிகலாவிடம் தெரிவித்தோம். இது சரியான முடிவு தான் என்று அவர் சொன்னார்.

அதன்படி நாங்கள் ஒருமித்த முடிவுடன் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.

சர்கார் பட விஷயத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. பிரச்சினை செய்வது தேவையற்றது. டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சலால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு தேவையான உதவியை செய்யாமல், சர்கார் படத்திற்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள். இது சரியல்ல.

ஜெயலலிதா ஆட்சியில் வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை தூக்கி போட்டு எரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் இலவச தொலைக்காட்சியையும் போட்டு எரிப்பதாக காட்சி அமைக்கப்பட்டு இருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது. படத்தில் ஒருதலைபட்சமாக காண்பிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும்.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, தேசிய அளவில் ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். தி.மு.க. இருக்கும் எந்த கூட்டணியிலும் எங்கள் கட்சி இடம் பெறாது.

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாமல் அ.தி.மு.க.வினர் தடுத்துவிட்டனர். இப்போது 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து வேகமாக செயல்படுவது போல் காட்டிக் கொள்கின்றனர்.

எங்களை பொறுத்தவரை ஏற்கனவே தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து நாங்கள் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

தேவர் மகன் படத்தில் சாதி கலவரத்தை தூண்டும் வகையில் எந்த காட்சியும் இடம் பெறவில்லை. அது நல்ல படம்.

அந்த படத்தின் 2-வது பாகம் எடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் நடித்தபோது கமல்ஹாசன் நடிகராக மட்டும் இருந்தார். இப்போது அவர் அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். அதை மனதில் வைத்து அவர் இந்த படத்தின் 2-வது பாகத்தை எடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.



Next Story