காஷ்மீரில் என்கவுண்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை; இணையதள சேவை முடக்கம்


காஷ்மீரில் என்கவுண்டர்:  2 தீவிரவாதிகள் சுட்டு கொலை; இணையதள சேவை முடக்கம்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:31 AM GMT (Updated: 10 Nov 2018 10:31 AM GMT)

தெற்கு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் என்கவுண்டரில் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் டிக்கென் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து, பாதுகாப்பு படையினர், ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல் துறையின் சிறப்பு அதிரடி படை மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் கூட்டாக அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தவுடன் தீவிரவாதிகள் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர்.  இதனை தொடர்ந்து வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

இந்த சம்பவத்தில் வஜீத் உல் இஸ்லாம் மற்றும் லியாகத் வானி ஆகிய 2 ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த தாக்குதலை அடுத்து புல்வாமா பகுதியில் மொபைல் வழியேயான இணையதள சேவை தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டது.  வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.  சாலைகளில் போக்குவரத்தும் நடைபெறவில்லை.  இதேபோன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் பணிகள் பாதிப்படைந்தன.

Next Story