பாகிஸ்தான் எல்லையில் காஷ்மீருக்குள் ஊடுருவ தயார்நிலையில் 160 பயங்கரவாதிகள் - ராணுவ அதிகாரி தகவல்


பாகிஸ்தான் எல்லையில் காஷ்மீருக்குள் ஊடுருவ தயார்நிலையில் 160 பயங்கரவாதிகள் - ராணுவ அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 11 Nov 2018 10:15 PM GMT (Updated: 11 Nov 2018 8:36 PM GMT)

காஷ்மீருக்குள் ஊடுருவ பாகிஸ்தான் எல்லையில் 160 பயங்கரவாதிகள் தயார்நிலையில் இருப்பதாக ராணுவ உயர் அதிகாரி தெரிவித்தார்.

ஜம்மு,

கடந்த 2016-ம் ஆண்டு துல்லிய தாக்குதலை (சர்ஜிக்கல் தாக்குதல்) திட்டமிட்டவர்களில் ஒருவரான ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் ஜம்முவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீருக்குள் ஊடுருவதற்காக, எல்லையில் பல இடங்களில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் 140 முதல் 160 பேர் வரை காத்திருக்கின்றனர். இவர்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் உயிர்ப்புடன்தான் உள்ளன.

அந்த நாட்டின் எண்ணம் இன்னும் மாறவில்லை. பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்வது, தாக்குதல் நடத்த வைப்பதை பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டு உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பும் தொடர்ந்து செய்து வருகின்றன.

பாகிஸ்தானின் கொள்கை மாறாதவரை, எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடரும். அதிக பனிப்பொழிவு காணப்படும் பகுதிகள் மற்றும் அதிகம் பயன்படுத்தப்படாத பாதைகள் வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.

இந்த பயங்கரவாதிகளை எதிர்கொள்ள திட்டம் தயாராக உள்ளது. அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுடனும் ஆலோசனை நடத்திய பின், இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.



Next Story