சத்தீஷ்கர் சட்டமன்ற முதல் கட்ட தேர்தல்: 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவக்கம்


சத்தீஷ்கர் சட்டமன்ற  முதல் கட்ட தேர்தல்: 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவக்கம்
x
தினத்தந்தி 12 Nov 2018 1:49 AM GMT (Updated: 12 Nov 2018 2:05 AM GMT)

சத்தீஷ்கர் சட்டமன்றத்துக்கு முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.

ராய்பூர், 

90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபையின் ஆயுட்காலம் முடிவதைதொடர்ந்து அங்கு நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று(திங்கட்கிழமை) முதல் கட்டமாக 18 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

மோஹ்லா-மான்பூர், அண்டாகர், பானுபிரதாப்பூர், தண்டேவாடா, பிஜாப்பூர் உள்பட 10 தொகுதிகளில் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், ராஜ்நந்த்கான் உள்ளிட்ட 8 தொகுதிகளில் காலை 8 மணி முதல் 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

இதில் 10 தொகுதிகள் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் நிறைந்த பகுதி ஆகும். மக்கள் தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்று மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர். மேலும் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15 நாட்களில் மாவோயிஸ்டுகள் 7 பெரிய தாக்குதல்களிலும் ஈடுபட்டனர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் துணை ராணுவ வீரர்கள் 65 ஆயிரம் பேரும், மாநில போலீசார் 35 ஆயிரம் பேரும் என மொத்தம் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். முதல்-மந்திரி ராமன் சிங் போட்டியிடும் ராஜனாந்த்கான் தொகுதியிலும் இன்று வாக்குப் பதிவு நடக்கிறது.

மீதமுள்ள 72 தொகுதிகளிலும் வருகிற 20-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் 11-ந் தேதி நடைபெறும். 15 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஷ்காரில் இம்முறை ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதேநேரம் முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியவை அமைத்துள்ள கூட்டணியும் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Next Story