பெண் காவலர்கள் வயது சான்றை ஆய்வு செய்தோம்-ஆர்.எஸ்.எஸ்.; அதிர்ச்சி அளிக்கிறது-காங்கிரஸ்


பெண் காவலர்கள் வயது சான்றை ஆய்வு செய்தோம்-ஆர்.எஸ்.எஸ்.; அதிர்ச்சி அளிக்கிறது-காங்கிரஸ்
x
தினத்தந்தி 12 Nov 2018 4:35 PM GMT (Updated: 12 Nov 2018 4:35 PM GMT)

சபரிமலையில் பெண் காவலர்களின் வயது சான்றை ஆய்வு செய்தோம் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் வல்சனின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இதற்கு அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபரிமலை போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து 3 ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்களில் ஒருவரான வல்சன் தில்லங்கேணி பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசும்பொழுது, சபரிமலையில் கடந்த 6ந்தேதி சிறப்பு பூஜைக்காக கோவில் திறக்கப்பட்டபொழுது, பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்ட 15 பெண் காவல் அதிகாரிகளின் வயது சான்றை நானும், மற்றவர்களும் ஆய்வு செய்தோம் என கூறினார்.

அவரது இந்த பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சென்னிதாலா கூறியுள்ளார்.

இதனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டுக்குள் சபரிமலை உள்ளது நிரூபணம் ஆகியுள்ளது.  பெண் காவல் அதிகாரிகளின் வயது சான்றை ஆய்வு செய்தது அரசின் முழு தோல்வியை காட்டுகிறது.  ஆர்.எஸ்.எஸ்.சின் விருப்பத்திற்கு ஏற்ப போலீசார் செயல்பட்டது அவமரியாதைக்குரிய விசயம் என கூறியுள்ளார்.

Next Story