தேசிய செய்திகள்

சபரிமலை வழக்கில் திடீர் திருப்பம் : சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை + "||" + A sudden twist in Sabarimala case Inquiry again in Supreme Court

சபரிமலை வழக்கில் திடீர் திருப்பம் : சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை

சபரிமலை வழக்கில் திடீர் திருப்பம் : சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை
அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கடும் எதிர்ப்பு எதிரொலி. சபரிமலை வழக்கில் திடீர் திருப்பம். சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை. 5 நீதிபதிகள் முன்னிலையில் ஜனவரி 22-ந் தேதி தொடங்குகிறது.
சபரிமலை கோவில் தொடர்பான மறுஆய்வு மனுக்களை ஜனவரி மாதம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு சம்மதம் தெரிவித்துள்ளது. அதே நேரம் அனைத்து பெண்களையும் கோவிலுக்கு அனுமதிக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.


புதுடெல்லி,

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் புகழ் பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்ற நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்தது.

இதற்கு எதிராக பல்வேறு பெண்கள் அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நீதிபதிகள் அமர்வு, அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியது.

இதில் 5-வது நீதிபதியான இந்து மல்கோத்ரா மதச் சம்பிரதாயங்களில் கோர்ட்டு தலையிடக்கூடாது என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை சில மகளிர் அமைப்புகள் வரவேற்றன. ஆனால் அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பா.ஜனதாவும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. அதே நேரம் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்றுவோம் என்று கேரள அரசு கூறி உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 17-ந்தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையே, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு அமைப்பினர் மற்றும் தனிநபர்கள் தரப்பில் 48 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் அனைத்தும் பொதுவாக 5-வது நீதிபதி இந்து மல்கோத்ரா அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அமைந்துள்ளன.

அந்த மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மதநம்பிக்கை மற்றும் மத சடங்குகள் சார்ந்த விஷயங்களை அரசியல் சட்டம் வரையறுத்துள்ள கருதுகோள்களை வைத்து பரிசீலிக்கக் கூடாது. பொதுவாக சபரிமலை கோவிலின் சடங்குகளில் நம்பிக்கை கொண்ட அய்யப்ப பக்தைகளான எந்த பெண்களும் சபரிமலை செல்ல முன்வராத சூழ்நிலையில் இந்த கோவிலின் சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளுடன் எந்த தொடர்பும் இல்லாத ஒரு சிலர் தாக்கல் செய்த மனுக் களை விசாரணைக்கு ஏற்றது மிகவும் தவறானதாகும்.

அந்த மனுக்களை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லாத சூழ்நிலையில் அவை சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது, எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.

பெண்களின் உடலியல் தொடர்பான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அவர்கள் இந்த ஆலயத்துக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற தவறான கருத்தின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல.

சபரிமலையில் உள்ள அய்யப்பன் சிலை “நைஷ்டீக பிரம்மச்சரிய” தன்மை கொண்டதாகும். எனவே, இந்த சிலையின் முன்பு பெண்கள் செல்வதற்கு மதநம்பிக்கையின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது பெண்களின் மாண்புக்கு எந்த வகையிலும் ஊறு விளைவிக்கும் தன்மை கொண்டது அல்ல.

எனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அவற்றில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மறுஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் நேற்று தலைமை நீதிபதியின் அறையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தினர்.

பொதுவாக இதுபோன்ற மறுஆய்வு மனுக்கள் திறந்த அமர்வில் வக்கீல்கள் வாதங்களுடன் விசாரிக்கப்படாமல் நீதிபதிகள் அறையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு விசாரிப்பது வழக்கமாகும். அதன் அடிப்படையில் இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் கீழ்க்கண்ட உத்தரவை பிறப்பித்தனர்.

நீதிபதிகள் கூறியதாவது:-

இந்த வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறுஆய்வு மனுக்களும் திறந்த நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு அனுமதிக்கப்படுகின்றன. இந்த மறுஆய்வு மனுக்களுடன் இது தொடர்பாக நிலுவையில் ஏதேனும் மனுக்கள் இருந்தால் அவையும் ஒன்றாக இணைத்து வருகிற ஜனவரி 22-ந்தேதி உரிய அமர்வு முன்பு விசாரிக்கப்படும்.

அதேநேரம் இந்த வழக்கின் மீது கடந்த செப்டம்பர் 28-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் மீது எவ்விதமான தடையும் விதிக்கப்படவில்லை என்பதையும் இங்கு தெளிவுபடுத்துகிறோம்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, நேற்று காலை தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், நீதிபதிகள் சஞ்ஜய் கிஷண் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 4 ரிட் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த ரிட் மனுக்கள் அனைத்தும் மறுஆய்வு மனுக்களை பரிசீலனை செய்த பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று 5 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த மனுக்களும் மற்ற மறுஆய்வு மனுக்களுடன் சேர்த்து ஜனவரி 22-ந்தேதிக்கு விசாரணைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்ரீம் கோர்ட்டு முடிவு குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “கடந்த 28-ந்தேதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறி இருக்கிறது. இருப்பினும், மண்டல மகரவிளக்கு சமயத்தில் எல்லா வயது பெண்களையும் அனுமதிப்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார்.

மறுஆய்வு மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்து இருப்பதற்கு சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். “அய்யப்பனின் ஆசியாலும், பக்தர்களின் பிரார்த்தனையாலும் இந்த திருப்பம் நிகழ்ந்துள்ளது” என்று அவர் கூறினார்.

மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளையும் வரவேற்றுள்ளார்.

மாநில சட்டசபை எதிர்க் கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதாலாவும் சுப்ரீம் கோர்ட்டு முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கேரள அரசு, குறிப்பிட்ட வயது பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா பிராமணர் சங்கம் மறுசீராய்வு மனு தாக்கல்
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா பிராமணர் சங்கம் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
2. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி ; பிரபலங்கள் கருத்து
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து பிரபலங்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். #Sabarimala #SabarimalaTemple