வருகிற 17-ந் தேதி சபரிமலைக்கு செல்வதாக திருப்தி தேசாய் அறிவிப்பு


வருகிற 17-ந் தேதி சபரிமலைக்கு செல்வதாக திருப்தி தேசாய் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Nov 2018 10:15 PM GMT (Updated: 14 Nov 2018 9:23 PM GMT)

வருகிற 17-ந் தேதி சபரிமலைக்கு செல்வதாக பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் அறிவித்து உள்ளார். பாதுகாப்பு கேட்டு கேரள அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில், 2 மாத கால மண்டல–மகரவிளக்கு பூஜைக்காக 17–ந்தேதி (சனிக்கிழமை) சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது.

அன்றைய தினமே சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்வதற்கு செல்ல இருப்பதாக மராட்டியத்தை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் அறிவித்து உள்ளார். அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என பிரசாரம் மேற்கொண்டு வரும் இவர், தடை செய்யப்பட்ட வயதுடைய மேலும் 6 பெண்களுடன் சபரிமலைக்கு செல்வதாகவும், அய்யப்பனை தரிசிக்காமல் மராட்டியத்துக்கு திரும்ப மாட்டோம் எனவும் அறிவித்துள்ளார்.

தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேரள அரசுக்கு இ–மெயில் மூலம் கடிதம் அனுப்பியிருப்பதாக கூறிய அவர், அரசு மீது நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு பாதுகாப்பு கேட்டு பிரதமருக்கும் அவர் இ–மெயில் அனுப்பி உள்ளார். திருப்தி தேசாயின் கடிதம் கிடைத்திருப்பதை உறுதி செய்துள்ள கேரள அரசு, அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தது.

இதற்கிடையே திருப்தி தேசாய் குழுவினரை சபரிமலையில் அனுமதிக்க மாட்டோம் என அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் கூறியுள்ளார்.


Next Story