சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு


சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு
x
தினத்தந்தி 15 Nov 2018 9:51 AM GMT (Updated: 15 Nov 2018 9:51 AM GMT)

சபரிமலை விவகாரம் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

திருவனந்தபுரம், 

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் புகழ் பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்ற நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. இதற்கு எதிராக பல்வேறு பெண்கள் அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நீதிபதிகள் அமர்வு, அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியது. 

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 17-ந்தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையே, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு அமைப்பினர் மற்றும் தனிநபர்கள் தரப்பில் 48 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோயில் நடைதிறக்கப்பட உள்ளது. 

இதற்கிடையே, மண்டல பூஜை சீசனுக்காக நடைதிறப்பதற்கு முன் சபரிமலை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரள அரசு ஏற்பாடு செய்து இருந்தது.  இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

கூட்டத்தில் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய சமரச திட்டம் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களை தனியே அனுமதிப்பது குறித்து ஆலோசனை  நடத்தப்பட்டது. அனைத்துக்கட்சி கூட்டத்தில்  புதிய யோசனையை பினராயி விஜயன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இதனை  எதிர்கட்சிகள் ஏற்கவில்லை.

இந்த நிலையில் கூட்டத்தில்  பினராயி விஜயன் பேசும்போது,

செப்டம்பர் 28  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தெளிவாகக் கூறுகிறது.  அது பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதாகும். இந்த தீர்ப்பிற்கு எதிராக அரசு எந்த நிலையையும் எடுக்க முடியாது. பக்தர்களின் உணர்வுகளை நாங்கள  மதிக்கிறோம். சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின்  தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தும். ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தாலும், சுப்ரீம் கோர்ட்  உத்தரவை அமல்படுத்துவதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை என கூறினார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு  அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என எதிர்கட்சிகள்   எச்சரிக்கை விடுத்து உள்ளன.

மேலும் எதிர்க்கட்சிகள்  காங்கிரஸ், பாரதீய ஜனதா வெளிநடப்பு செய்தன.

Next Story